குழந்தைகள் ஆபாசப்படங்கள் பார்க்கும் நபர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும்

பதிவு செய்த நாள் : 05 டிசம்பர் 2019 01:15


சென்னை:

தமிழகத்தில் இணைய தளங்கள் மூலம் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்த ஆயிரக்கணக்கானவர்களின் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாகவும், அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப்பிரிவு ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகக்காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கடந்த ஜனவரி மாதம் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவு தமிழக காவல்துறை கூடுதல் டிஜிபி ரவி தலைமையில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் இந்தியாவில்தான் அதிகம் பார்ப்பதாகவும், அதிலும் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இந்த எண்ணிக்கை அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி தமிழக காவல்துறைக்கு டில்லி உள்துறை தகவல் அனுப்பியுள்ளது. குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் பட்டியலைத் தமிழக காவல்துறைக்கு மத்திய உள்துறை அனுப்பி வைத்ததன் பேரில் தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப்பிரிவு அது தொடர்பான புலனாய்வில் இறங்கியுள்ளது. இதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அது தொடர்பாக கூடுதல் டிஜிபி ரவி கூறியதாவது, ‘‘மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள பட்டியலின் அடிப்படையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் என கைது நடவடிக்கை தொடங்கப்படவுள்ளது. வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பினால் அவர்கள் கண்காணிக்கப்பட்டு, கைது செய்யபட்டு போக்சோ சட்டம் பாய்ச்சப்பட்டு அவர்களுக்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்த்தவர்கள், டவுன்லோடு செய்தவர்கள் போன்றவர்களின் ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் இணைய முகவரிகள் மத்திய உள்துறை அமைச்சகம் எங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த இணைய முகவரிக்கு சொந்தமான நபர்களின் முழுத் தகவல்களையும் அறியும் வகையில், அந்த தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பகிர்ந்துள்ளோம். வெகுவிரைவில் முழுத்தகவலும் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யும் பணி தொடங்கும். அது குறித்து சம்பந்தப்பட்ட எஸ்பி மற்றும் கமிஷனர் அலுவலகங்களுக்கு நாங்கள் அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளார்கள். மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழக காவல்துறையில் உருவாக்கப்பட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவின் மூலம் குழந்தைகளை இது போன்ற இன்னல்களில் இருந்து காக்கும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறன. தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள ‘காவலன்’ செயலியை செல்போனில் பதிந்து வைத்திருந்தால் ஆபத்தான நிலையில் உள்ளதாக நினைக்கும் பெண்கள், திறன்பேசியை மூன்று முறை அசைத்தாலே அவர்களுக்கு உடனடியாக காவல்துறை உதவி செய்வதற்கும் தொழில்நுட்பத்தின் மூலம் வழிகை செய்யப்பட்டுள்ளது’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.