காவல்நிலையங்களுக்கு வருவோரிடம் கடிந்து பேசாதீர்கள்: போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை

பதிவு செய்த நாள் : 04 டிசம்பர் 2019 12:28

சென்னை,        

‘‘காவல் நிலையங்களுக்கு வருகின்ற புகார்தாரர்கள் மற்றும் மனுதாரர்களுக்கு உதவுங்கள். எவரிடமும் கடிந்து பேசாதீர்கள்’’ என கமிஷனர் விஸ்வநாதன் ஸ்கோச் விருதுக்கு நன்றி தெரிவித்தற்காக எழுதிய கடிதத்தின் மூலம் சென்னை நகரில் பணிபுரியும் காவல்துறையினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை நகர் முழுவதும் சிசிடிவி கேமரா மயம், போக்குவரத்து காவல்துறை நவீனமயமாக்கப்பட்டது, போலீஸ் நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்காக சென்னை நகர காவல்துறை மத்திய அரசால் வழங்கப்படும் ஸ்கோச் விருதுகளை தட்டிச்சென்றது. இந்த விருது கிடைப்பதற்கு சென்னைநகர காவல்துறையில் உள்ள காவலர்கள் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் வரை ஒத்துழைப்பு அளித்ததே காரணம் என்று பாராட்டி கமிஷனர் விஸ்வநாதன் நேற்று இரண்டு பக்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘அன்புள்ள காவல் ஆளிநர்களே மற்றும் அதிகாரிகளே, 25.9.2019 மற்றும் 29.11.2019 அன்று டில்லியில் நடந்த விழாவில் மத்திய மனிதவளர்ச்சித்துறை அமைச்சர் சென்னை பெருநகர காவல் துறைக்கு மாநகர் முழுதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தியதற்காகவும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு பணப் பரிவர்த்தனையற்ற இ-சலான் முறையில் அபராதம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தியமைக்காகவும், காவல் நிலையங்களை மிகவும் தூய்மையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுத்தமைக்காகவும் 3 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய மத்திய அரசின் உயரிய விருதுகளைப் பெறுவதற்கான வகையில் உழைப்பினையும், முயற்சியினையும் தந்ததுடன் அதற்கு வழிகாட்டிய அதிகாரிகளுக்கு, சிறந்த ஒத்துழைப்பு நல்கிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

இந்தியாவிலேயே முதன்முறையாக நமது சென்னை பெருநகர காவல் நிலையங்களில்தான் அவ்வாறு குவிந்துக் கிடந்த வாகனங்களை சட்டப்படியாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு நமது  காவல் நிலையங்களை மிகவும் தூய்மையாக பராமரித்துக் கொண்டு வருகிறோம். இந்த வகையில் நாம் சாதித்துக் காட்டியதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

இதற்காக எனது மனமார்ந்த நன்றியை உங்கள் அனைவருக்கும் உரித்தாக்கிக் கொள்கிறேன். மேலும், காவல் நிலையங்களுக்கு வருகின்ற புகார்தாரர்கள் மற்றும் மனுதாரர்களுக்கு உதவுங்கள். எவரிடமும் கடிந்து பேசாதீர்கள். பிரச்சினைகளின் தன்மை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம். ஆனால், அதனைக் காவல் நிலையத்திற்கு கொண்டு வருபவர்களுக்கு பெரியதாகத்தான் இருக்கும். பிரச்சினைகளின் தன்மை எவ்வாறாக இருப்பினும் அதனைப் பரிவுடன் அணுகி அதற்கான உரிய தீர்வினை சட்டத்தின் வழியாக செய்திடல் வேண்டும் என்று அன்புடன் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னைக் காவல் துறை மக்களின் நண்பன் சேவகன் காவலன் என்ற நம்பிக்கையை மக்களிடம் பெறுவதிலும் நாம் தொடர்ந்து முனைப்பு காட்ட வேண்டும் என்று வேண்டுகிறேன். நாம் பணிபுரிகின்ற இடத்தின் தூய்மையோடு, மக்களோடு பழகுவதிலும் சொல் தூய்மை காப்போம். தமிழ்நாடு காவல் துறையின் பெருமைதனையும், சென்னை பெருநகர காவல் துறையின் பெருமைதனையும் பார் போற்றும் வகையில் மிளிரச் செய்வோம்" என்று அதில் அவர் கூறியுள்ளார்.