போலீசார் குடும்பத்தினர் 10,968 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கி சாதனை: கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டு

பதிவு செய்த நாள் : 29 நவம்பர் 2019 14:39

சென்னை,          

போலீசாரின் குடும்பத்தினருக்கு நடந்த பாஸ்போர்ட் மேளா நிகழ்ச்சியின் பயனாக ஒரே மாதத்தில் போலீசார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 10,968 பேருக்கு பாஸ்போர்ட் வழங்கி சென்னை பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் சாதனை படைத்துள்ளது.

சென்னை நகர காவல் துறையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு கமிஷனர் விஸ்வநாதன் அவர்கள் அனைவருக்கும் பாஸ்போர்ட் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்தார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அது தொடர்பாக ஆலோசனை நடத்திய போலீஸ் அதிகாரிகள் சென்னை நகரில் பாஸ்போர்ட் இல்லாமல் இருக்கும் போலீசார் மற்றும் அவரது மனைவி பிள்ளைகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்குறிய பாஸ்போர்ட் மேளாவை ஏற்பாடு செய்தனர். 

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக்பாபு இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்தார். கடந்த மாதம் 18ம் தேதி முதல் கடந்த 09ம்  தேதி வரை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதற்கான பாஸ்போர்ட் மேலா கூட்டம் கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது.இம்முகாமில் பெறப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். இதனையடுத்து ஒரே மாதத்தில் காவலர்கள் 3, 891 பே மற்றும் காவலர் குடும்ப உறுப்பினர்கள் 7,077 பேர் என மொத்தம்  10,968 பேருக்கு பாஸ்போர்ட்டுக்கள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து நேற்று மாலை சுமார் 5.00 மணியளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கமிஷனர் ஏகே விஸ்வநாதன் இதில் கலந்து கொண்டு பாஸ்போர்ட் முகாமை சிறப்பாக நடத்தி அவற்றை விரைவாக வழங்கிய பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் மற்றும் சென்னை நகர பாஸ்போர்ட் பிரிவு  காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அசோக் பாபு, கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் தினகரன் (வடக்கு), பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), இணை கமிஷனர்கள் எழில்அரசன் (போக்குவரத்து தெற்கு), ஜெயகவுரி (போக்குவரத்து வடக்கு) மற்றும் ஏ.ஜி.பாபு (தலைமையிடம்), நுண்ணறிவுப்பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.