தமிழ்நாட்டில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

பதிவு செய்த நாள் : 18 நவம்பர் 2019 16:01

திருநெல்வேலி,

தமிழ்நாட்டில் பல தலைவர்கள் இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, காமராஜருக்கு நிகராக சர்வ வல்லமை பெற்றவர்களாக தற்போது யாரும் இல்லை, அந்த இடம் வெற்றிடமாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று கூறியுள்ளார்.

நெல்லையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

 உள்ளாட்சித்  தேர்தல் நாளை நடத்தப்பட்டாலும் பாஜக தயாராக உள்ளது. உள்ளாட்சித்  தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றக்கூடிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அனைத்து நிலைகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டு விருப்ப மனு பெறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது 

தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும்.

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, காமராஜர், கருணாநிதி இருந்த இடங்கள்  வெற்றிடமாகவே உள்ளன.

தற்போது பல்வேறு பொறுப்புகளில் தலைவர்கள் உள்ளார்களே தவிர சர்வ வல்லமை பெற்றவர்கள் இல்லை.

இவ்வாறு, பொன்,ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.