குற்றாலம்:
இலஞ்சியில் உள்ள ஆற்றுபாலம் அகலப்படுத்தபடாததால் திருமண நாட்களில் கடுமையான டிராபிக் ஜாம் ஏற்படும் நிலை தொடர்கிறது. மணமக்கள் சில கி.மீ., தூரம் நடந்து செல்லக் கூடிய அவலநிலை இருந்து வருகிறது.
திருக்குமரன் குடிகொண்டுள்ள கோயில்களில் சிறப்பு பெற்றதாக இலஞ்சியில்அமைந்துள்ள திருவிலஞ்சிக் குமரன் கோயிலாகும். இந்த கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக, நாள்தோறும் அதிகமான அளவில் வந்து செல்கின்றனர்.
முகூர்த்த நாட்களில் இக்கோயிலில் வைத்து ஏராளமான திருமணங்கள் நடப்பதுண்டு. இந்நிலையில், கோயிலுக்கு பின்புறமுள்ள ஆற்றுப் பாலம் பல ஆண்டுகளாக குறுகிய நிலையில் காணப்பட்டு வருகிறது.
இந்த ஆற்று பாலத்தை, அகலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், இலஞ்சி குமாரர் கோயில் பக்தர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
முகூர்த்த தினங்களில் அதிகமான வாகனங்கள் இலஞ்சிக் குமாரர் கோயிலுக்கு வந்து செல்லும் நிலையில் அதிகமான அளவில் டிராபிக் ஜாம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.
இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கோயிலுக்கு வாகனங்களில் செல்ல முடியாதநிலை ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் சில கி.மீ., தூரம் பாலத்தை கடந்து, நடந்தே வரக்கூடிய நிலை ஏற்பட்டு வருகிறது.
திருமணம் அதிகமாக நடத்த கூடிய சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆற்றுப் பாலத்தில் அமைந்துள்ள குறுகிய பாலத்தால், தொடரும் டிராபிக் ஜாம் முகூர்த்த நாட்களில் மட்டுமின்றி, பெரும்பாலான நாட்களிலும் அதிகமாக இருந்துவருவதாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறிவருகின்றனர்.