குலசை., முத்தாரம்மன் கோயிலில் மகிஷா சூரசம்ஹாரம் கோலாகலம் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 09:07


உடன்குடி:

குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்களின் ஓம் காளி, ஜெய் காளி கோஷம் விண்ணைப் பிளக்க மகிஷா சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது.

  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த செப். 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து தினசரி காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி பவனி நடந்தது.

பக்தர்கள் குவிந்தனர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை காண கடந்த அக். 8ம் தேதி அதிகாலை முதலே

வெளியூர்களிலிருந்து பஸ், கார், வேன், லாரி,லோடு ஆட்டோ  போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து கடற்கரையில் குவிந்தனர். இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் மற்றும் சூரனை வதம் செய்யும் சூலாயுதம் ஆகியவற்றிற்கு  சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 10.35 மணிக்கு கோயிலில் இருந்து சூலாயுதத்தை விரதம் இருந்த கோயில் பட்டர் குமார்வெளியே எடுத்து வந்தார்.

ஆக்ரோஷத்துடன் புறப்பட்டார் அன்னை பின்னர் கோயில் கலையரங்கத்தில் சிம்ம வாகனத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோயில் முன் எழுந்தருளிய அன்னைக்கு தீபாராதனை நடந்தது. இரவு 10.45 மணிக்கு சூரன் முன்னே செல்ல அன்னை முத்தாரம்மன் ஆக்ரோஷத்துடன் கடற்கரை நோக்கி சென்றாள். நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் எழுந்தருளிய அன்னை முத்தாரம்மனை இடபுறம், வல புறம் நேராக என இரண்டு முறை வலம் வந்த சூரன் அன்னையை நோக்கி போர் புரிந்தான்.சூரனை அழித்தார்

 அநீதியை அழித்து நீதியை நிலை நாட்ட 10 நாட்கள் கடும் விரதம் இருந்த மகிஷாசூரமர்த்தினியான அன்னை முத்தாரம்மன் தன் தலையுடன் மோதிய சூரனை இரவு 12.06 மணிக்கு அழித்தார். அப்போது சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி,ஜெய் காளி என கோஷமிட்டனர். பக்தர்களின் கோஷம் விண்ணை முட்டியது.

 தொடர்ந்து சூரன் சிங்கம் முகம் கொண்டு அன்னை முத்தாரம்மனிடம் போர் புரிந்தான். உலகத்தை காக்கும் அன்னை முத்தாரம்மன் மிக ஆக்ரோஷத்துடன் இரவு 12.12 மணிக்கு சூரனை அழித்தாள்.

 ஆனால் சூரன் அன்னையை ஏமாற்றி எருமை தலை கொண்டு அன்னையிடம் மோதினான். கடுமையாக நடந்த இந்த போரில் எருமை தலையுடன் மோதிய சூரனை குவலயம் போற்றும் குணபூரணி அன்னை முத்தாரம்மன் சூலாயுதத்தால் நள்ளிரவு 12.18 மணிக்கு அழித்தாள்.


சேவல் வடிவம் எடுத்த சூரன்

 இதிலும் தப்பிய சூரன் சேவல் வடிவம் கொண்டு அன்னையுடன் மோதினான். அன்னை முத்தாரம்மன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி நள்ளிரவு 12.23 மணிக்கு சேவல் வடிவம் கொண்ட சூரனை அழித்தார்.

 சூரன் வீழ்ந்ததும் கூடியிருந்த பக்தர்கள் ஒம் காளி, ஜெய் காளி, தாயே முத்தாரம்மா என்று விண்ணை பிளக்கும் அளவிற்கும் கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து 10 நாட்கள் கடும் விரதம் இருந்த அன்னை முத்தாரம்மன் கடும் ஆக்ரோஷத்தோடு சூரனை வதம் செய்ததால்

அன்னைக்கு கடற்கரை மேடையில் சாத்தப்படுத்தும் அபிஷேகம் நடந்தது.

 அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

. தொடர்ந்து சிதம்பரேஸ்வரர் கோயில் மேடையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

 நேற்று காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் வீதி உலாவும், மாலை 4 மணிக்கு சப்பரம் கோயிலை வந்தடைந்ததும் காப்பு களைதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு களைந்து தங்களது ஊருக்கு சென்று விரதம் முறித்தனர். நள்ளிரவு 12 மணிக்கு சோ்க்கை அபிஷேகம் நடந்தது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

 இன்று (அக்.10) காலை 6 மணி,8 மணிக்கு,10 மணிக்கு அபிஷேக ஆராதனையும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடக்கிறது.

  ஏற்பாடுகளை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, நிர்வாக அதிகாரி பரமானந்தம் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

சூரசம்ஹாரத்தை காண கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் அவர்கள் கட்டுப்படுத்தி அனைவரும் தெளிவாக பார்க்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்த பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.