நெல்லை டவுனில் சக்தி தரிசனம் நள்ளிரவு 32 சப்பரங்களின் அணிவகுப்பு

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2019 08:49


திருநெல்வேலி:

நெல்லை டவுனில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 32 சப்பரங்களில் ‘சக்தி தரிசனம்’ நடந்தது.

நெல்லை கல்சுரல் அகாடமி மற்றும் தென்மாவட்ட அனைத்து சமுதாய பூஜாரிகள் சங்கம் இணைந்து நடத்திய 10வது ஆண்டு சக்தி தரிசன விழா நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு பகவத்சிங் தெரு துர்கை அம்மன், தடிவீரன் கோயில் தெரு தேவி மாரியம்மன், திருப்பணிமுக்கு மாரியம்மன், தடிவீரன் கோயில் மேலத்தெரு தேவி சுந்தராட்சி அம்மன், சிவா தெரு முத்தாரம்மன், மாதாகோயில் தெரு உச்சினிமாகாளி அம்மன், காவல்பிறை தெரு உச்சினிமாகாளி அம்மன், குற்றாலம் ரோடு முப்பிடாதி அம்மன் சப்பரங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா வந்தன. மேலும் கீழரதவீதி வாகையடி முப்பிடாதி அம்மன், புகழேந்தி தெரு முப்பிடாதி அம்மன், அக்கசாலை விநாயகர் தெரு உச்சினிமாகாளி அம்மன், மகிழ்வண்ணபுரம் தெரு தங்கம்மன், மேட்டுத்தெரு அறம்வளர்த்த நாயகி அம்பாள், சாலியர் தெரு மாரியம்மன், பிட்டாபுரத்தி அம்மன், வெ.தா.பி.,கோயில் தெரு திரிபுரசுந்தரி அம்மன், அரசடி பாலத்தெரு ராஜராஜேஸ்வரி அம்மன், சந்தி விநாயகர் கோயில் தெரு துர்கை அம்மன், தண்டியல் சாவடித்தெரு உச்சினிமாகாளி அம்மன் சப்பரங்கள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா வந்தன.

சுந்தரர் தெரு உச்சினிமாகாளி அம்மன், அம்மன் சன்னதி தெரு உச்சினிமாகாளி அம்மன், தொட்டிபாலத்தெரு தங்கம்மன், சாஸ்தா கோயில் தெரு வடக்கு உச்சினிமாகாளி அம்மன், செங்குந்தர் வேம்படி தெரு ஆயுள்பிராட்டி அம்மன், நல்ல முத்தம்மன் கோயில் தெரு நல்ல முத்தம்மன், ஜெயபிரகாஷ் தெரு தங்கம்மன், அண்ணா தெரு உச்சினிமாகாளி அம்மன், அனவரதவிநாயகர் கோயில் தெரு உச்சினிமாகாளி அம்மன், பாரதியார் தெரு முப்பிடாதி அம்மன், குறுக்குத்துறை ரோடு பூமாதேவி அம்மன், திருவள்ளுவர் தெரு முப்பிடாதி அம்மன் போன்ற 32 சப்பரங்கள் வீதிஉலா வந்தது. நள்ளிரவு நெல்லையப்பர் கோயில் பெரியதேர்திடலில் வந்தடைந்தது. ஒரே இடத்தில் 32 சப்பரங்கள் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து ஒரே நேரத்தில் அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதிகாலை வரை பக்தர்கள் அம்பாளை தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கார்த்திகேயன் குருக்கள், விஜயராகவ பட்டாச்சார், சந்திரசேகர் பல்லவாராயர், காசிவிஸ்வநாத பட்டர், ராஜேஷ் பட்டர், அத்ரி.மாரியப்பசுவாமிகள், எம்.ஆர்.,சுப்பிரமணியன், குணசேகரன், சொனா.வெங்கடாச்சலம், காசிவிஸ்வநாதன், சீனிவாசன், தங்கவேலாண்டி, கணேசன், விநாயகம்,நயன்சிங், ராயப்பன், சீனிவாச பட்டாச்சார், சுதன் சிவம் மற்றும் நெல்லை கல்சுரல் அகாடமி மற்றும் தென்மாவட்ட அனைத்து சமுதாய பூஜாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

பக்தர்கள் அதிருப்தி:

நெல்லையப்பர் கோயில் பெரியதேர் திடலுக்கு 32 சப்பரங்களும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்துவிட வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் சில சப்பரங்கள் குறிப்பிட்ட நேரத்தையும் கடந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகுதான் வந்தன. தாமதமாக வந்த சப்பரங்களுக்காக பிற சப்பரங்கள் மங்கள ஆரத்திக்காக காத்திருந்தன. அதிகாலை 3.30 மணிக்கு தான் மங்கள ஆரத்தி காட்டப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.