சென்னை நகர காவல்துறைக்கு மத்திய அரசு விருது

பதிவு செய்த நாள் : 26 செப்டம்பர் 2019 11:24


சென்னை:

மனிதவள மேம்பாட்டிற்கான அமைச்சகம் சார்பில், சிறந்த செயல்பாட்டிற்கான ஸ்கோச் விருது சென்னை போலீசுக்கு வழங்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. இதற்காக சென்னை நகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

ஆண்டுதோறும் இந்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் அரசு துறைகளின் மக்கள் சேவை, சிறந்த முன்மாதிரிக்கான சேவை விருது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 52-வது ‘ஸ்கோச்’ விருது தமிழக வேளாண்துறைக்கு வழங்கப்பட்டது. பயனுள்ள வகையில் உருவாக்கப்பட்ட ‘உழவன் கைபேசி செயலி’யை சிறப்பாக வடிவமைத்ததற்காக வழங்கப்பட்டது. இதே போல மெட்ரோ ரயிலின் நகர்ப்புறக் கட்டமைப்பிற்கு ஏற்ப செயல்பாடு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் மேலாண்மை ஆகிய சிறப்பான பணிக்காக சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்துக்கு ‘ஸ்கோச்’ விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு சென்னை காவல் துறையின் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸ் பிரிவு என இரண்டு பிரிவுகளும் ‘ஸ்கோச்’ விருதுக்கு போட்டியிட்டன. சென்னை நகரில் கமிஷனர் விஸ்வநாதனின் கனவுத் திட்டமான ‘மூன்றாவது கண்’ திட்டத்தின் மூலம் சென்னையில் 2.60 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றச்செயல்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு  தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், சிறு வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் சென்னை நகர போலீசாரும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதன் மூலம் சென்னை நகரில் பெரும்பாலான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன. அண்ணா நகர், நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதி நவீன ஏன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் போக்குவரத்துப் போலீசில் அறிமுகப்படுத்தப்பட்ட இ சலான் மூலம் இந்த ஆண்டு ரூ. 30 கோடி அபராதம் வசூலானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இது தவிர சென்னை நகரில் மேலும் 5 லட்சம் சிசிடிவி கேமராக்களை நிறுவ கமிஷனர் விஸ்வநாதன் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

சென்னை நகரில் சிசிடிவி கேமரா, போக்குவரத்து நவீனம் உள்ளிட்ட போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனின் செயல்பாடுகளை பாராட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின விழாவில் நல் ஆளுமை விருது வழங்கினார். சென்னை நகரில் மேற்கண்ட முன்னேற்றப் பணிகளின் அடிப்படையில் ‘ஸ்கோச்’ விருதுக்கு சென்னை சட்டம் ஒழுங்கு போலீஸ் போட்டியிட்டது. அவற்றை ஆய்வு செய்த மத்திய அரசின் மனிதவள மேலாண்மை அமைச்சகம் சென்னை நகர காவல்துறைக்கு ஸ்கோச் விருதை வழங்கியது. டில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்ஆப் இந்தியாவில் நடைபெற்ற விழாவில், மத்திய மனித வளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியா சென்னை நகர காவல்துறைக்கான ஸ்கோச் விருதை சென்னை நகர கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அருண் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.