சங்கரன்கோவிலை மையமாகக் கொண்டு தனி மாவட்டம் கோரி கடையடைப்பு போராட்டம்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2019 15:13

சங்கரன்கோவில்,  

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசியை மையமாகக் கொண்டு புதிதாக தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. 

தற்போது அதற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டு மாவட்டத்தின் எல்லைகளை பிரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் சங்கரன்கோவிலை மையமாக கொண்டு திருவேங்கடம் , சிவகிரி , புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளை கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் கடையடைப்பு போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள் , வர்த்தக சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், திருவேங்கடம், பனவடலிசத்திரம், சுப்புலாபுரம், குருக்கள்பட்டி ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் , விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.