பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பில் அனைத்து மகளிர் போலீசார் தீவிரம்

பதிவு செய்த நாள் : 11 செப்டம்பர் 2019 11:56

சென்னை,           

சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப்பிரிவு போலீசார் காணாமல் போன 86 வயது மூதாட்டி மற்றும் 17 வயது சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தி அந்த சிறுமியை மீட்டு சகோதரியிடம் ஒப்படைத்தனர்.

அரசு பள்ளி ஒன்றில் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மாணவிகளிடம் கலந்துரையாடுகிறார்

மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட ‘நிர்பயா நிதியத்தின்’ கீழ் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் கமிஷனர் விஸ்வாதன் நேரடி மேற்பார்வையில் இந்த பிரிவு கடந்த ஜுன் மாதம் தொடங்கப்பட்டது. இதன் துணைக்கமிஷனராக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 26ம் தேதியன்று மகளிர் போலீசார் ரோந்து செல்வதற்கு வசதியாக அம்மா பேட்ரோல் எனப்படும் பிங்க் நிற வாகனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு வழங்கினார். அதில் மகளிர் போலீசார் சென்று சென்னையில் பள்ளிகள், கல்லுாரிகள், பெண்கள் விடுதிகளுக்கு சென்று போலீசார் குழந்கைள், பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளித்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு தவிக்கும் பெண்கள், குழந்தைகளை கண்காணித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை நகர் முழுவதும் 470 விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டு, சென்னை நகரில் இதன் விளைவாக கடந்த வாரம் சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் நகைப்பட்டரைகளில் கொத்தடிமைகளாக இருந்த 40 சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் அனாதைகளாக திரிந்த சிறுவர், சிறுமிகளை மீட்டுள்ளனர்.

புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியாத 12ம் வகுப்பு மாணவிக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிப்பை தொடர உதவி புரிந்துள்ளார். திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கடந்த மாதம் 30ம் தேதி காணாமல் போன மணி சுந்தரம்மாள் என்ற 80 வயது மூதாட்டியை மீட்டு அவரது மகனிடம் ஒப்படைத்தார்.

அம்பத்துார் மகளிர் போலீசார் பீகாரில் இருந்து சென்னைக்கு வழி தவறி வந்த சிறுவனைமீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். அதே போல மயிலாப்பூர் மகளிர் போலீசார் மனநலம் பாதித்த பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அயனாவரத்தில் வீட்டை விட்டு கோபித்துக் கொண்ட 15 வயது சிறுமியை மீட்டு ஆலோசனைகள் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளன். மேலும் ராயபுரம் மகளிர் போலீசார் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை  தடுத்து நிறுத்தி, சிறுமியை சகோதரியிடம் ஒப்படைத்தனர்.

சென்னையில் உள்ள நான்கு மண்டலங்களுக்கும் 4 கூடுதல் துணைக்கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு, பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பணி தொடரும் என துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.