தொழில்நுட்பம், விரல்ரேகைப்பிரிவுகளில் பயிற்சி நிறைவு விழா: டிஜிபி திரிபாதி பங்கேற்பு

பதிவு செய்த நாள் : 31 ஆகஸ்ட் 2019 11:00


சென்னை:

தமிழக காவல்துறையில் தொழில்நுட்பம், விரல்ரேகைப்பிரிவுகளில் எஸ்ஐக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 407 பேருக்கு பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் டிஜிபி திரிபாதி கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு அவர்களை வழியனுப்பி வைத்தார்.  

தொழில்நுட்பம் மற்றும் விரல்ரேகைப்பிரிவில் 407 எஸ்ஐக்களுக்கு பயிற்சி நிறைவு விழா நேற்று சென்னை வண்டலுாரை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நடந்தது. தொழில்நுட்பப்பிரிவு எஸ்ஐக்கள் 75 மகளிர் உட்பட 228 பேர் மற்றும் விரல் ரேகை பிரிவு எஸ்ஐக்கள் 60 மகளிர் உட்பட 179 பேர் தங்களது அடிப்படை பயிற்சியினை முடித்தனர். தமிழக டிஜிபி திரிபாதி இதில் கலந்து கொண்டு எஸ்ஐக்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொழில்நுட்பப் பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்ஐக்களுக்கு அந்த பயிற்சியானது 25 வாரங்கள் நடந்தது. அவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப பாடங்கள், பணி ஒழுக்கம் மற்றும் நடத்தைகள், ஒருமைப்பாடு மற்றும் பணிநேர்மை கற்பிக்கப்பட்டது. அது மட்டுமின்றி தகவல்தொடர்பு, தற்கால தொழில் நுட்ப முன்னேற்றம், மென்பொருளின் தற்கால வளர்ச்சி முறைகள், கணிணி வழி சைபர் குற்றங்களில் சவால்களை சந்திக்கும் திறன்களை வளர்க்கும் மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்பட்டதுடன், குற்றம் சார்ந்த சட்டங்கள், மத்திய மற்றும் மாநில சட்டங்கள், பணி மேன்மையை கையாள்வது, மனித உரிமையை பாதுகாக்கும் அரசியலமைப்பு

சட்டப்பயிற்சிகள் இவர்களுக்கு அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியை முடித்து செல்லும் தொழில் நுட்ப உதவி ஆய்வாளர்களில்

82 அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் கமிஷனரேட்டுக்களிலும், மாவட்டங்களிலும் உள்ள சைபர் காவல் நிலையங்களில் பணியமர்த்தப்படவுள்ளனர். நேற்று நடந்த விழாவின் போது உள்ளரங்கு, வெளியரங்கு மற்றும் துப்பாக்கி சுடுதல் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய பயிற்சி உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கங்களையும், ஒட்டுமொத்த பயிற்சியில் சிறந்து விளங்கிய பயிற்சி உதவி ஆய்வாளருக்கு கவுரவ  வாளையும் டிஜிபி திரிபாதி வழங்கினார். இவ்விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் போலீஸ் அகாடமி ஏடிஜிபி அமரேஷ்புஜாரி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.