முன்னாள் முதல்வர் காமராஜரின் நண்பருக்கு சொந்தமான ரூ. 250 கோடி சொத்து அபகரிப்பு

பதிவு செய்த நாள் : 31 ஆகஸ்ட் 2019 10:41

சென்னை:

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த முதலமைச்சர் காமராஜரின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான ரூ. 250 கோடி சொத்துக்களை போலி ஆவணம் மூலம் அபகரித்ததாக நெல்லையைச் சேர்ந்த நபர் உள்பட இருவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 65). தற்போது இவர் சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில் வசித்து வருகிறார். இவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நண்பர் சங்குகணேசனின் மகள் வழி பேரன் ஆவார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது, ‘‘எனது தாயார் தனலட்சுமியின் தந்தை பிரான்சிஸ் என்கிற சங்குகணேசன் நாடார். அவர் வாழ்ந்து வந்த காலத்தில் கொழும்புவில் கலைமகள் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். பின்னர் 1950ல் சென்னைக்கு வந்து செட்டிலான அவர் முத்தியால்பேட்டை, வரதாமுத்தியப்பன் தெருவில் ஸ்ரீமகள் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அதன் நிர்வாகிகளாக ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் நெல்லை வடக்கன்குளத்தைச் சேர்ந்த அருள்ராஜன் ஆகியோர் இருந்து வந்தனர். சங்குகணேசன் வாழ்ந்த காலத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்து ஆயிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாக இருந்தார். நெல்லை, வடக்கன்குளத்தில் நேரு நேஷனல் பள்ளிகளை துவங்கி அந்த பள்ளி வருவாய்க்கென சுமார் 45 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தவர் ஆவார். ராஜேந்திரன் மறைந்து விட்டார். அவரது மகன் அருள்ராஜன் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்து சங்கு கணேசன் தனது சொத்துக்களை தனக்கு விற்றது போல் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்துக்கொண்டார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்’’ இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. நாகராஜனின் தாயார் தனலட்சுமி மற்றும் தாயாரின் உடன்பிறந்தவர்களான அன்னலட்சுமி, வரதராஜன், கிருஷ்ணகுமாரி, கலைமகள் ஆகியோர் மரணத்திற்கு பின்னர் வாரிசுதாரர் அடிப்படையில் முத்தையால்பேட்டை சொத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக நாகராஜன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெற்றார். அப்போது அதில் பெரிய மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. ஏற்கனவே சங்கு கணேசன் தானமாக கொடுத்த சொத்துக்கள் உள்ளிட்ட ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து மற்றும் முத்தையால்பேட்டை சொத்து விற்பனை ஆணையத்தில் இருந்த  கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை. ராஜேந்திரனின் மகன் அருள்ராஜன், விவேகானந்தன் ஆகியோர் போலியான கையெழுத்திட்டு ஆள்மாறாட்டம் செய்து ரூ. 250 கோடி மதிப்பிலான சொத்துக்களை அபகரித்திருப்பது உண்மை என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மத்தியக் குற்றபிரிவு போலீசார் அருள்ராஜன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விவேகானந்தன் ஆகியோர் மீது 419 (நம்பிக்கை மோசடி), 465, 467, (போலி ஆவணம் தயாரித்தல்) உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தன் மீது அளித்துள்ள புகாரை வாபஸ் வாங்கும்படி அருள்ராஜன் மிரட்டுவதாகவும் நாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.