‘‘பெண்கள், குழந்தைகளை நோட்டமிடும் ஆசாமிகளுக்கு செக்’’: அறிமுகமானது ‘பிங்க் பேட்ரோல்’

பதிவு செய்த நாள் : 27 ஆகஸ்ட் 2019 00:33

சென்னை, :

சென்னை நகரில் பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்காக ‘பிங்க் பேட்ரோல்’ எனப்படும் அம்மா பேட்ரோல் போலீஸ் வாகனங்கள் நேற்று சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்கள், குழந்தைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆசாமிகளுக்கு செக் வைக்கும் வகையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் புதிய பெண் துணைக்கமிஷனர் தலைமயில் புது அவதாரம் எடுத்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு டில்லியில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு ‘நிர்பயா நிதியம்’ மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அந்த நிதியத்தின் உதவியுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழகத்தில் ‘அம்மா’ ரோந்து வாகனங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டன.

முதற்கட்டமாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கும் இந்த வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஏடிஜிபி ரவி தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவு அனைத்து மகளிர் காவல் நிலையங்களோடு இணைந்து செயல்படும். தற்போது ரூ. 7 கோடியே 50 லட்சம் செலவில், பிங்க் பேட்ரோல் எனப்படும் 40 அம்மா ரோந்து வாகனங்கள் முதலைமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

 இந்த வாகனத்தில் ஒலி பெருக்கி, சைரன் உள்ளிட்டவற்றோடு மேலும் ஒரு சிறப்பம்சமாக நவீன கண்காணிப்பு காமிரா முன்பக்க கண்ணாடி அருகே இணைக்கப்பட்டுள்ளது. இவை நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு, நிகழ்விட தேவைக்கேற்ப அதிகப்படியான பாதுகாப்பு உள்ளிட்டவைகளை தேவைப்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும்.  குறிப்பாக இந்த வாகனங்களின் மூலம் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், பேருந்து,  நிறுத்தங்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு செய்யப்படும்.

சென்னையில், இதுவரை அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் சட்டம், ஒழுங்கு துணைக்கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தது. இனி அவை அனைத்தும் பெண் துணைக்கமிஷனரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கென சென்னை நகரில் துணைக்கமிஷனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவு துணைக்கமிஷனராக ஜெயலட்சுமி என்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முதற்கட்டமாக சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் பள்ளிக்கு அம்மா பேட்ரோல் வாகனம் சென்றது. துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி பிங்க் வாகனம் பற்றி பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் அம்மா பேட்ரோல் வாகனம் பற்றி விளக்கி கூறினார். பள்ளி மாணவிகளை அம்மா வாகனத்தில் அழைத்துச் சென்று அதில் பெண்கள், குழந்தைகளை காக்கும் வசதிகள் பற்றி எடுத்துச்சொல்லினார். மாணவிகளும் மகிழ்ச்சியாக போலீஸ் வாகனத்தில் பயணம் செய்தனர்.

* பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி பேட்டி

அது குறித்து அவர் கூறுகையில், ‘‘சென்னையில் மட்டும் சுமார் 46 லட்சம் பெண்கள் வசிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்பாக 2,108 வழக்குகளும், 43, 022 புகார் மனுக்களும் பதிவாகி உள்ளன. சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு புதிய ரோந்து வாகனம் (அம்மா பேட்ரோல்) வழங்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, குடிசை மாற்று வாரிய பகுதிகள், ஐடி பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் உள்பட பல பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும். பள்ளி, கல்லூரி பகுதிகளில் திடீரென வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். இந்த ரோந்து வாகனத்தில் செல்லும் பெண் போலீசார் பள்ளி மாணவ- மாணவிகள் செல்லும் ஆட்டோ, வேன்களிலும் திடீரென சோதனை செய்வார்கள். முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பை பெண்கள், குழந்தைகளுக்கு கொடுக்க உள்ளோம். பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பில்

தனி முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அந்த பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வார்கள். இந்த புதிய ரோந்து வாகனத்தில் முன்பகுதியில் கேமரா, எல்இடி லைட், வீடியோ பதிவு செய்யும் வகைகள், ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் இந்த ரோந்து வாகனம் செயல்படும். குழந்தைகள் உதவி எண், பெண்கள் உதவி எண் இந்த வாகனத்தில் இருக்கிறது. உதவி கேட்டு ஒருவர் அழைக்கும் போது அது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும் அல்லது காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் இணைக்கப்பட்டு விடும். அதனால் யாருக்கும் காவல்துறையின் உதவி கிடைக்காமல் இருக்காது.

பாதுகாப்பை உணர்த்தும் வகையில் பிங்க் கலர் வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனம் மொபைல் காவல் நிலையம் போன்றது. இதற்குள் பெண் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, மற்ற பெண் காவலர்கள் இருப்பார்கள். வழக்கு விசாரணை பணி இருந்தால் இன்ஸ்பெக்டர் இல்லாமல் எஸ்ஐ இருப்பார். எந்த நேரத்திலும் புகார் கொடுக்கலாம்.

குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி ஆசிரியைகளுக்கு பயிற்சி கொடுக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.