சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம்: கைதானவர்களிடம் தோண்டித்துருவ சிபிசிஐடி முடிவு

பதிவு செய்த நாள் : 27 ஆகஸ்ட் 2019 00:31

சென்னையில் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தின் மூலம் பயங்கரவாதிகள் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து தமிழகத்தில் நாசவேலைகளில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தினார்களா என்பது குறித்து கைதான 5 நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் போலீஸ் காவலில் எடுத்து தோண்டித்துருவி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக்களை, நவீன கருவிகள் மூலம் உள்ளூர் அழைப்புக்களாக மாற்றி சென்னை அண்ணாநகரில் சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் ஒன்று இயங்கி வந்தது. இது தொடர்பாக மத்திய அரசின் தொலை தொடர்பு அமைச்சகத்தின் மூலம் வந்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடந்த 21ம் தேதி அண்ணாநகர் தங்கம் காலனியில் நடந்து வந்த டிஆர்ஏவி தொலைபேசி இணைப்பகத்தை சிபிசிஐடி போலீசார் கடந்த வாரம் ரெய்டு நடத்தி 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

வெளிநாட்டில் இருந்து ‘வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால்’ என்ற தொழில்நுட்பம் வழியாக தொலைபேசி அழைப்புகள் தமிழகத்துக்கு வருகின்றன. அதை அதிகாரப்பூர்வ வெளிநாட்டு தொலைத்தொடர்பு இணைப்பகங்களின் உதவியின்றி, ‘சிம் பாக்ஸ்‘ கருவி மூலம் சில இணைப்பகங்கள் சட்ட விரோதமாக உள்ளூர் தொலை பேசி அழைப்புகளாக மாற்றி வழங்குகின்றன. அந்த வகையில் டிஆர்ஏவி தொலைத்தொடர்பு நிறுவனம் சட்டவிரோதமாக செயல்பட்டு மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொலைத்தொடர்பு நவீன உபகரணங்களையும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். குறிப்பாக சிம் பாக்ஸ் தொலைத்தொடர்பு கருவியை சட்டவிரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வந்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் இணைய அழைப்புகளை அரசுக்கு தெரியாமல் அண்ணாநகரில் உள்ள இந்த சட்டவிரோத தொலைத்தொடர்பு இணைப்பகம் மூலமாக லோக்கல் இணைப்புகளாக மாற்றி இங்கிருக்கும் சிம் கார்டு மூலமாக அழைப்பு வந்தது போல் மோசடி செய்துள்ளனர்.

இதற்காக சென்னையில் போலி முகவரி மூலம் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகளை பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. கடந்த 2 வருடமாக நடக்கும் இந்த போலி சட்டவிரோத இணைப்பகம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்த மோசடியில் கைதான போலி டெலிபோன் இணைப்பகத்தின் நிர்வாகி முப்பிரி ரெட்டி உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான மனுவை கோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்யவுள்ளனர். இந்த நிறுவனம் அனைத்து விதமான தொலை தொடர்பு நிறுவனங்களின் சிம்கார்டுகளையும் மோசடிக்கு பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொலை தொடர்பு நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சிம் பாக்ஸ் பயன்படுத்தி எவ்வாறு வெளிநாட்டு அழைப்புகள் உள்நாட்டு அழைப்புகளாக மாற்றப்பட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பீடு எவ்வளவு என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பலுக்கு தொடர்புடையவர் லண்டனில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சட்டவிரோத இணைப்பகம் மூலம் வரும் வெளிநாட்டு இணைய அழைப்புகள் கண்காணிக்கவோ, பதிவு செய்யவோ முடியாது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அண்ணாநகரில் இயங்கி வந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகத்தில் 1,500 சிம் கார்டுகளுடன், நவீன தொழில் நுட்பக் கருவிகளைக் கொண்டு முறைகேடு நடந்துள்ளது. இது தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதை பயங்கரவாதிகள் பயன்படுத்தி நாச வேலையிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஓமன், மஸ்கட் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் சமூக வலை தளங்கள், வாட்ஸ்ஆப் போன்றவற்றுக்கு தடை விதித்துள்ளனர். தொலைபேசி மூலம் பேசினால் அதிகம் செலவாகும் என்பதால் அங்குள்ளவர்கள் வாட்ஸ்ஆப் கால் மூலமே பெரும்பாலும் பேசுகின்றனர். அது தவிர சிலநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பேச அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையின் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு தொலைபேசி சேவை நிறுவனங்கள் வழங்கும். வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை சட்டவிரோத இணைப்பகங்கள், உள்ளூர் அழைப்புகளாக மாற்றி வழங்கும் போது, வெளிநாட்டில் இருந்து பேசுவோருக்கு வழக்கமான கட்டணம் மட்டுமே செலவாகும். அந்த முழு தொகையும் இந்திய தொலைபேசி சேவை நிறுவனத்துக்கு வந்து சேராததால் இந்திய தொலைபேசிக்கு நிறுவனத்துக்கு பெரும் வருமான இழப்பீடு ஏற்படுகிறது.

உள்ளூர் அழைப்புகளை வழங்குவதற்கான சேவை கட்டணம் மட்டுமே இந்திய தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த அழைப்பின் மூலம் சமூகவிரோதிகள் தங்கள் கூட்டாளிகளுக்கு சதித்திட்டங்கள் பற்றி ஆலோசனை செய்வதற்கும், தகவல் பரிமாற்றம் செய்யவும் வாய்ப்புள்ளது. எனவே இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது.  இது போன்ற நவீன தொழில்நுட்பம்  இந்தியாவில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சட்டவிரோத இணைப்பகங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் அதிகபட்சமாக 250 சிம் கார்டுகளுடன்தான் இது போன்ற இணைப்பகங்கள் செயல் பட்டு வந்துள்ளன. இந்த முறை பிடிபட்டுள்ள இணைப்பகத்தில் 1500 சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது இதுவரை இல்லாத அளவாகும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர்.