கடையம் வீரத் தம்பதிகளுக்கு எம்எல்ஏ பாராட்டு

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2019 00:41


கடையம்:

கடையத்தில் கொள்ளையர்களை விரட்டிய வீரத் தம்பதிகளை எம்.எல்.ஏ., பூங்கோதை நேரில் சந்தித்து பாராட்டினார்.

கடையம், கல்யாணிபுரத்தில் கடந்த 11ம்தேதி இரவு கொள்ளையடிக்க நுழைந்த கொள்ளையர்களை சண்முகவேலு, செந்தாமரை வீரத் தம்பதிகள் விரட்டியடித்தனர்.

ஆலங்குளம் எம்.எல்.ஏ., பூங்கோதை நேற்று சண்முகவேலு, செந்தாமரை தம்பதிகளை கல்யாணிபுரத்தில் அவர்களது இல்லத்தில் சந்தித்து பாராட்டி பரிசுகள் வழங்கினார். அப்போது, இந்த முதிய வயதிலும் கொள்ளையர்களைக் கண்டு அஞ்சாமல், சாதூர்யமாகப் போராடி அடித்து விரட்டியுள்ளனர்.

இந்த தைரியம் அனைத்துப் பெண்களுக்கும் வேண்டும். இந்தியாவில் கேரளாவிற்கு அடுத்து முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் 9.5 சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வாழ்கின்றனர். முதியவர்கள் தங்கள் முதுமை காலத்தை இதுபோன்ற இயற்கை சூழந்த இடத்தில் கழிப்பதையே விரும்புவர். எனவே, காவல்  துறையினர் முதியவர்கள் தனித்து வாழும் இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதியில் தொடர் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும். கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபடும் காவல் துறையினர் அப்பாவிகளைத் துன்புறுத்துவது மிகவும் கண்டிக்கத் தக்கது. எனவே இனியும் குற்றவாளிகளைத் தேடுகிறோம் என்று அப்பாவி தொழிலாளர்களை துண்புறுத்தக் கூடாது என்றார்.

மேலும் தம்பதிகளிடம் எப்பொழுதும் நீங்கள் மிளகாய் பொடி, பேப்பர் ஸ்பிரேயரை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு ஸ்பிரேயரும், மிளகாய் பொடியும் வழங்கினார். தொடர்ந்து கல்யாணிபுரம் பொதுமக்களைச் சந்தித்து அவர்களிடம் இனி காவல் துறையினரால் இடையூறு ஏற்படாதவாறு மாவட்ட கலெக்டரிடமும், எஸ்.பி.யிடமும் வலியுறுத்துவேன் என்று கூறினார்.

எம்.எல்.ஏ.வுடன் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேர்மச்செல்வன், கடையம் ஒன்றிய இளைஞரணிச் செயலர் தங்கராஜ், கீழக்கடையம் ஊராட்சி செயலர் துரைசிங், அற்புதராஜ், கல்யாணிபுரம் முருகன், சண்முகம், ராமசாமி உடனிருந்தனர்.