தனியார் பார் திறக்க எதிர்ப்பு மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட 78 பேர் மீது வழக்கு

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2019 00:33


மார்த்தாண்டம்:

கொல்லங்கோடு அருகே தனியார் பார் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 78 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

        கொல்லங்கோடு அருகே வெங்குளம் கரை பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபார் நடத்த ஒருவர் லைசென்ஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதை திறக்க முயன்ற தகவல் அப்பகுதியில் பரவியது. இதைதொடர்ந்து அங்கு ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் திரண்டு மதுக்கடைக்கு செல்லும் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற ராஜேஷ்குமார் எம்எல்ஏ மற்றும் திமுக, தேமுதிக உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் அங்கு திரண்டு மறியல் போராட்டத்தை நடத்தினர்.

         சம்பவ இடம் வந்த கொல்லங்கோடு போலீஸ் எஸ்ஐ ஜெயகுமார் போராட்டக்காரர்களுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், உடன்பாடு ஏற்படவில்லை. ரோடு மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டதை தொடர்ந்து போலீசார், ராஜேஷ்குமார் எம்எல்ஏ உட்பட 102 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மதுபாருக்கு எதிராக பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்நிலையில், அனுமதியின்றி ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜேஷ்குமார் எம்எல்ஏ உள்பட 78 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.