தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: போதை ஆசாமிகள் இருவர் கைது

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2019 00:30

சென்னை:

சென்னை, எண்ணுாரில் தனியார் நிறுவன ஊழியரை காரில் கடத்திச் சென்று ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டிய போதை ஆசாமிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). சென்னையிலுள்ள எண்ணுாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ம் தேதியன்று இரவு சுமார் 11.30 மணியளவில், அலுவலக வேலையாக, எண்ணுார் தாழங்குப்பம், பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 2 பேர் பாலமுருகனிடம் ஒரு விசிட்டிங் கார்டை காட்டி முகவரி கேட்டனர். அவர் அதற்கு பதில் அளித்துக் கொண்டிருந்த போது திடீரென அவர்கள் பாலமுருகனை காரில் இழுத்து போட்டு, அவரை கடத்திச் சென்றனர். இதனைக் கண்ட பாலமுருகனின் நண்பர் ராஜதுரை காரை விரட்டிச் சென்றார். ஆனால் காரை பிடிக்க முடியவில்லை. அது குறித்து எண்ணுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் பாலமுருகன் கடத்தப்பட்ட இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு காரின் பதிவெண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை எண்ணுார் ராமகிருஷ்ணா நகர், கடற்கரை அருகில் வாகன  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கார் போலீசாரைக் கண்டதும், காரை திருப்பிச்சென்று தப்பியோடினர். அந்த காரில்தான் பாலமுருகன் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் காரை விரட்டிச்சென்று பிடித்தனர்.

காரில் இருந்த பாலமுருகனை பத்திரமாக மீட்டனர். அவரை கடத்திச் சென்ற எண்ணுார் தாழங்குப்பத்தைச் சேர்ந்த கிளிண்டன் (26),  தினேஷ் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் குடிபோதையில் பாலமுருகனை காரில் கடத்திச் சென்று பணம் ரூ. 1 லட்சம் பணம் தரும்படி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தனர். கிளிண்டன் மீது 2013ம் ஆண்டு தரமணி போலீஸ்  நிலையத்தில் ஒரு குற்ற வழக்கும், எண்ணுார் போலீஸ் நிலையத்தில் எஸ்ஐ யை தாக்கியதாக ஒரு வழக்கும் உள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.