போலீஸ் வாக்கி டாக்கியை எடுத்து பேசிய போதை வாலிபரால் பரபரப்பு

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2019 00:26

சென்னை: 

குடிபோதையில் நின்று கொண்டிருந்த இரு நபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்துச் சென்று போலீஸ் பேட்ரோல் ஏற்றி  கொண்டு சென்றபோது அதில் ஒருவர் போலீஸ் மைக்கில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்சன் பாய் ஆக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் ராயலா நகரைச் சேர்ந்த வருண்ராஜ் (26), நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில், விருகம்பாக்கம் ஆற்காடு ரோட்டில் இருசக்கரவாகனத்தில் வந்தனர். அப்போது அவர்களை அங்கு இரவு ரோந்துப்பணியில் இருந்த ராயலா நகர் இன்ஸ்பெக்டர் சாம்சன் சேவியர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினார். இருவரும் குடிபோதையில் இருந்ததால் போலீசார் அவர்களை சந்தேகத்தின் பேரில் பேட்ரோல் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது பேட்ரோல் வாகனத்தில் உட்கார்ந்திருந்த வருண் ராஜ் திடீரென அங்கிருந்த போலீஸ் மைக்கை பிடித்து, ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை. போலீசார் என்னை பிடித்து வந்துவிட்டார்கள். என்னை காப்பாற்றுங்கள்’’ என அலறினார். போலீஸ் மைக்கில் வருண் பேசியதை அனைத்து அதிகாரிகளும் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் போதையில் பேசியதாக போலீசார் உயரதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தனர். இதனையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் அதிகாலை 3 மணியளவில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். போலீஸ் மைக்கில் வாலிபர் பேசியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.