‘பப்பி’ திரைப்படத்தில் சர்ச்சைக்காட்சிகளை நீக்ககோரி போலீஸ் கமிஷனரிடம் சிவசேனா புகார் மனு

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2019 00:26

சென்னை,:

நடிகர் யோகிபாபு நடித்த பப்பி என்ற திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி சிவசேனா அமைப்பின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிவசேனா அமைப்பின் இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பின் மாநில துணைச் செயலாளர் செல்வம் சார்பில் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு:– வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள ‘பப்பி’ என்ற  திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி யூட்யூப் மற்றும் சமூக வலைதளத்தில் சோனி மியூசிக் என்ற நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் வருண், யோகிபாபு இருவரும் நடித்துள்ளனர். இந்த திரைப்பட டிரெய்லர் காட்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த முழு நீல நிர்வாணப்படங்களில் மட்டுமே நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரையும் இந்து மத பிரசாரங்கள், போதனைகள் வழங்கும் சுவாமி நித்யானந்தாவையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும்பான்மையான இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளன. எனவே நிர்வாண நடிகருடன், சுவாமி நித்யானந்தாவை இணைத்து திரைப்பட முன்னோட்ட காட்சிகளை வெளியிட்டுள்ள ‘பப்பி’ திரைப்படக் குழுவினர் மற்றும் அதன் இயக்குநர் முரட்டு சிங்கிள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிய பின்னரே திரைப்படம் வெளியிட அனுமதிக்கும்படி சிவசேனா சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.