9,000 பேர் மீது ‘போக்சோ’: தண்டனை பெற்றவர்கள் 689: நிலுவையில் உள்ளவை 3,911: அதிரவைக்கும் புள்ளி விவரம்

பதிவு செய்த நாள் : 19 ஆகஸ்ட் 2019 11:44

சென்னை,         

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீது ‘போக்சோ’ சட்டம் பாய்ந்துள்ளது. அதில் 689 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்று சிறையில் உள்ளதாகவும், 3,911 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பெண் குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படும் கொடூர சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்த குற்றங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைத்துக் குழந்தைகளும், பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம்தான் போக்சோ. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ‘‘Protection of Children from Sexual Offences’’ என்பதன் சுருக்கமே ‘POCSO’. இந்திய தண்டனை சட்டப்பிரிவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த போக்சோ சட்டப் பிரிவுகள் 3,4,5,6 முதல் 14 மற்றும் 21 வரை பல்வேறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு விதமான தண்டனை.

அதன்படி போக்சோ பிரிவு 3 மற்றும் 4ன் படி குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது குற்றம் ஆகும். இதற்கு குறைந்த பட்சம் 7 ஆண்டு தண்டனை. அதிகபட்சம் ஆயுள் தண்டணையும் விதிக்கப்படுகிறது. பிரிவுகள் 5, 6ன் படி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள், குழந்தைகளின் பெற்றோர், கார்டியன், ஆசிரியர் அல்லது காவல்துறை அதிகாரியாக இருந்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படுகிறது. சட்டப்பிரிவு 7, 8ன்படி குழந்தைகளை அந்தரங்க உறுப்பைகளை தொடுவது, அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளை கட்டாயப்படுத்தி தொடவைப்பது குற்றம். அதாவது பாலியல் சீண்டல்கள் செய்யும் குற்றவாளிக்கு குறைந்தபட்ச தண்டனையாக 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், அதிகபட்சமாக 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதே போல 9, 10 பிரிவுகள் மற்றும் 21 வரை இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் நீள்கிறது.

இவ்வாறு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டாலும் தமிழகத்தில் குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள் நடப்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கடந்த ஜுன் மாதம் சென்னை மதுரவாயலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் (60) நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கொலை செய்து கழிப்பறையில் உடலை மறைத்து வைத்த கொடூர நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியது. போக்சோ சட்டம் இயற்றப்பட்ட 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு மே மாதம் வரை தமிழகம் முழுவதும் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ‘போக்சோ’ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை புள்ளி விவர ஆய்வுகள் கூறுகின்றன. 1,054 வழக்குகள் போலீசாரின் புலனாய்விலும், 3,911 வழக்குகள் நிலுவையிலும் உள்ளன. எட்டு ஆண்டுகளில் குழந்தைகளை சீண்டிய 689 பேர் தண்டனைக்குள்ளாகியுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படாத 2,902 பேர் விடுதலையாகியுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019 மே மாதம் வரை போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்ட 689 குற்றவாளிகள் குற்றம் நிரூபிக்கப்பட்டு கோர்ட்டில் தண்டனை பெற்றுள்ளனர். மேலும் 2,902 பேர் குற்றமற்றவர்கள் என வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 2016ம் ஆண்டு 41 வழக்குகள் புலனாய்விலும், 728 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும், 131 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 813 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே போல 2017ம் ஆண்டு 1,025 வழக்குகள் கோர்ட்டில் விசாரணையிலும், 56 பேர் தண்டனையும் பெற்றுள்ளனர். 346 பேர் வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு 269 வழக்குகள் போலீசாரின் புலனாய்விலும், 1,249 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும், 29 பேருக்கு தண்டனையும் கிடைத்துள்ளது. மேலும் 171 பேர் குற்றமற்றவர்கள் என விடுதலையாகியுள்ளனர். இந்த ஆண்டு கடந்த மே மாதம் வரை 655 வழக்குகள் போலீசாரின் புலனாய்விலும், 92 நீதிமன்ற விசாரணையிலும் உள்ளன, 2 பேர் வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு போக்சோ வழக்கில் யாருக்கும் தண்டனை கிடைக்க வில்லை. இவ்வாறு அந்த புள்ளிவிவரக்கணக்குகள் கூறுகின்றன.