தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: தலைமறைவான தாய், மகன், மகள்களை தேடும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள் : 19 ஆகஸ்ட் 2019 11:32

சென்னை,              

தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்து, 5 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் 2 மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை சென்னை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்ப்பேட்டையைச் சேர்ந்தவர் பானுமதி (வயது 59). இவரது மகன் யுவராஜ் (38) மற்றும் மகள்கள் ஷீலா (28), சுகன்யா (25). பானுமதி தனக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். அந்த பகுதியில் தனது மகன், மகள்களுடன் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவர் நம்பிக்கையாக பணத்தை திரும்ப கொடுத்ததால் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பேர் அவரிடம் சீட்டில் சேர்ந்தனர். கடந்த 2015ம் ஆண்டு பானுமதி தீபாவளி பண்ட் என்ற பெயரில் ஏலச்சீட்டு தொடங்கினார். மாதம் 1,000 ரூபாய் செலுத்தினால் தீபாவளி அன்று தங்க நாணயம் மற்றும் பரிசுப்பொருளுடன் கூடிய கிப்ட் பாக் தருவதாக கூறி விளம்பரம் செய்தார். அதே போல 5,000 செலுத்தினால் அந்த அளவுக்கேற்றாற் போல பட்டுப்புடவை,  தங்கநகைகளுடன் கூடிய மெகா பரிசு கிடைக்கும் என கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தார். மேலும் நகை பண்ட், குக்கர் பண்ட், சேலை பண்ட், பாத்திரங்கள் பண்ட் என 21 விதமான பண்ட்களில் பணம் வசூலித்துள்ளார். பானுமதியின் உடன் பிறந்த சகோதரர், சகோதரி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மற்றும் தேனாாம்பேட்டை, ஆழ்வார்ப்பேட்டை உள்ளிட்ட அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 100பேர் பானுமதியிடம்  பணம் செலுத்தினர். ஆனால் பணம் செலுத்தியவர்களுக்கு தீபாவளிப் பரிசுப்பணத்தை தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது. அவர் வீட்டைப் பூட்டி விட்டு கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பத்துடன் தலைமறைவானார். இதனால் அவரிடம் பணம் கொடுத்து பானுமதியின் உடன் பிறந்த தம்பி சேகர் உள்பட நெருங்கிய உறவினர்கள் உள்பட ஏமாந்த 100 பேரும் சென்னை கிண்டியில் உள்ள பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பானுமதி தனது மகன் யுவராஜ், மகள்கள் சுகன்யா, ஷீலா ஆகியோர் தீபாவளி பண்ட் என்ற பெயரில் 100 பேர்களிடம் ரூ. 2 கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது 420, 406, 120 பி  உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இதுவரை போலீசாரிடம் பிடிபடவில்லை. 3 ஆண்டுகளாக அவர்கள் பிடிபடாத நிலையில் இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.  அதனையடுத்து பானுமதிக்கு சொந்தமான ரூ. 1.25 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. அவற்றை கோர்ட் உத்தரவின் பேரில் விற்பனை செய்து ஏமாந்துபோனவர்களுக்கு திருப்பி அளிப்பதற்கான நடவடிக்கைகளை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்ட் சீட்டு நடத்தி ரூ. 2 கோடி மோசடி செய்த பானுமதி உள்ளிட்ட 3 பேரும் கடந்த 4 ஆண்டுகளாகவே தலைமறைவாகவே உள்ளனர். இதுவரை அவர்கள் பிடிபடாததால் அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் சென்னை கிண்டியில் உள்ள பொருளாரக்குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு (044 22504332, 94981 43072) தகவல் அளிக்கும்படி பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் கூறியதாவது, ‘‘கடந்த 2015ம் ஆண்டு முதல் பானுமதி உள்ளிட்ட 4 பேரும் தலைமறைவாகவே உள்ளனர். அவர்கள் எங்குள்ளனர் என தெரியவில்லை. பானுமதியின் கணவர் இறந்த நிகழ்வுக்கே அவர் வரவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி தனது சொந்த உறவுகளிடமே பானுமதி லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். அவர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாகி விட்டது. வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றவாளிகள் கைதானால் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது உறுதி’’ என தெரிவித்தார்