48 மணிநேர தடை நீக்கம் குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க அனுமதி

பதிவு செய்த நாள் : 10 ஆகஸ்ட் 2019 00:35


குற்றாலம்:

48  மணிநேரத்திற்கு பிறகு குற்றாலம் அருவிகளில் நேற்று மாலை குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது. தொடர்ந்து மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்தவண்ணம் காணப்பட்டது.

குற்றால சீசன் களைகட்டி வரும் நிலையில் கடந்த சில தினங்களாக அருவிகளுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. குளிப்பதற்கு நீண்ட வரிசையும், தொடர்ந்து சீசன் 'டல்'அடித்து காணப்பட்டது.

குற்றாலம் மலைப் பகுதிகளில் திடீரென பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த இரு தினங்களாக விடிய விடிய மழை பெய்து வந்த நிலையில் கடந்த ௭ம் தேதி மாலை  அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவியில் நேற்று முன்தினம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட நிலையில் மழை நீடித்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு தொடர்ந்ததால் நேற்று மதியம் ௩ மணிவரை இந்த தடை இருந்து வந்தது.

படிப்படியாக சாரல் குறைந்த நிலையில் அருவிகளில் தண்ணீர்வரத்து சற்று குறைந்தது. அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சுமார் ௪௮ மணிநேரம் அமலில் இருந்த தடை விலக்கப்பட்டு குளிக்க அனுமதிக்கப்பட்டது. குற்றாலம் மலைப் பகுதிகளில் மாலை ௪ மணிக்குமேல் மீண்டும் சாரல் மழை தென்பட்ட வண்ணம் இருந்தது.