நாட்டு வெடிகுண்டு வெடித்தது :வீட்டைவிட்டு பொதுமக்கள் ஓட்டம்

பதிவு செய்த நாள் : 28 ஜூலை 2019 09:46

கோவில்பட்டி,:

கோவில்பட்டியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியதில் வாலிபர் படுகாயமடைந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி முத்துநகர் ஜான்பாண்டியன் நகரை சேர்ந்த வி.ஏ.சாமி. இவரது மகன் கணேஷ் நவீன்(28). இவர்கள் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகின்றனர். நேற்று காலை கணேஷ் நவீன் வீட்டருகே உள்ள காலியிடங்களில் இருந்த குப்பைகளை அகற்றி கொண்டிருந்தார்.

அப்போது அதிலிருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதில் கணேஷ் நவீன் அலறி கீழே விழுந்தார்.அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

 மேலும், வெடிச்சத்தத்தின் அதிர்வில் அங்குள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இதனால் பொதுமக்கள் வீட்டை வெளியே ஓடி வந்தனர்.

 படுகாயமடைந்த கணேஷ் நவீன் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து டி.எஸ்.பி. ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன், எஸ்.ஐ., தர்மராஜ், இசக்கிராஜா மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

 மேலும், துாத்துக்குடி தடயவியல் நிபுணர் கலாலட்சுமி தலைமையிலான குழுவினர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். வெடிகுண்டு நிபுணர்கள் ஆதி, சுகுமார் ஆகியோர் வந்து, அந்த பகுதியில் வேறு வெடிகுண்டுகள் இருக்கின்றனவா என சோதனை நடத்தினர். மோப்ப நாய் `மியா’ வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது ஓடி நின்று விட்டது.

இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, வெடித்த நாட்டு வெடிக்குண்டு எந்த ரகத்தை சேர்ந்தது, இந்த பகுதியில் எப்படி நாட்டு வெடிக்குண்டு வந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர்.