திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள் : 28 ஜூலை 2019 09:44

திருச்செந்துார்:

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிப்பாடு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் கோயில்களில் ஆடி கிருத்திகையை நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

 அதே சமயம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் பஞ்சாங்கப்படி ஆடி கிருத்திகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. 6.15 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தன.

 காலை 10 மணிக்கு கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மேலும் வள்ளி, தெய்வானை சன்னதிகளில் தங்கபாவாடை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

 மாலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் தங்கத் தேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் வலம் வந்து கோயிலை சேர்ந்தார்.

 நேற்று கொண்டாடப்பட்ட ஆடி கிருத்திகை பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.