மார்த்தாண்டம் மேம்பால பக்கவாட்டு சுவர்களில் விரிசல்கள் : பொதுமக்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள் : 27 ஜூலை 2019 00:01


மார்த்தாண்டம்:

மார்த்தாண்டம் மேம்பால பக்கவாட்டு சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

   குழித்துறை தாமிரபரணி ஆற்றுபாலத்தில் இருந்து மார்த்தாண்டம் அருகே பம்மம் வரை சுமார் 2.6 கி.மீ. தூரத்திற்கு இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் முழுமையாக அதிகாரிகளின் மேற்பார்வை இன்றி இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், காங்கிரீட் பணிகள் நடந்தபோது முறையாக தண்ணீர் நனைத்து உறுதிபடுத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

                          மேம்பால பணிகள் குறித்து எவ்வித தகவல்களையும் வெளிப்படையாக தெரிவிக்காததால் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு இறுதி வரை முழு தகவல்கள் கிடைக்காமல் இருந்தது. மேம்பால வரைபடம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது.  தொடர்ந்து மேம்பாலத்தை குமரியில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி திறந்து வைத்தார். இதை தொடர்ந்து, மேம்பாலம் வழியாக வாகன இயக்கம் நடந்து வருகிறது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சர்வீஸ் ரோடும் செப்பனிடப்பட்டு வாகன இயக்கம் நடந்து வருகிறது.

                  மேலும், பம்மம் பகுதியில் சர்வீஸ் ரோடு அகலப்படுத்தாமல் விட்டதால் அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வீஸ் ரோடு செப்பனிடப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே பல இடங்களில் ரோடு பெயர்ந்து போக தொடங்கி உள்ளது. பல இடங்களில் தற்போதும் பணிகள் முழுமை அடையாமல் உள்ளன. அண்மையில், மேம்பாலத்தில் இருந்து மழைநீர் வடிவதற்காக பொருத்தப்பட்டிருந்த பிவிசி பைப் திடீரென ரோட்டின் குறுக்கே பெயர்ந்து விழுந்தது.

               இந்நிலையில், மேம்பாலத்தின் பக்கவாட்டில் எழுப்பப்பட்டுள்ள சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த விரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. விரிசல்கள் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு காணப்படுகிறது. பல இடங்களில் விரிசல்களில் இருந்து காங்கிரீட் துண்டுகள் பெயர்ந்து விழ தொடங்கி உள்ளன. அண்மையில் மேம்பால பக்கவாட்டு சுவரில் இருந்து காங்கிரீட் துண்டு பெயர்ந்து கீழே விழுந்ததில் அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

             மேம்பால பக்கவாட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டு காங்கிரீட் துண்டுகள் பெயர்ந்து விழுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதே நிலை நீடித்தால் பெரும் பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்படும். எனவே, பெயர்ந்த பகுதிகளை தற்காலிகமாக சீரமைப்பதை விடுத்து உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறையும், மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டியது அவசியமாகும்.