முதல் ஆடி செவ்வாய் கொளுக்கட்டை வைத்து வழிபாடு அவ்வையார் அம்மன் கோயிலில் பெண்கள் கூட்டம்

பதிவு செய்த நாள் : 24 ஜூலை 2019 10:55


ஆரல்வாய்மொழி:

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி மாதம் முதல் செவ்வாய்கிழமை அம்மன் கோயில்களில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.  

 ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆடியில் பெண்கள், கன்னி பெண்கள் அதிகாலை துயில் எமுந்து அவ்வையார் அம்மனை  நினைத்து பூஜை செய்து வந்தால் குடும்பம் செழிக்கும், வறுமை போகும்..  என்பது ஐதீகம்.  பெண்கள் ஆடி மாதம் விரதம் இருந்து அவ்வையார் அம்மன் கோயிலில்  கூழ் காய்ச்சி,  கொளுக்கட்டை அவித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

பெண்கள் கூட்டம்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தாழக்குடி அவ்வையார் அம்மன் கோயிலில்  ஆடி மாதம் முதல் செவ்வாய் என்பதால்  பெண்கள் கூட்டம் அலை மோதியது. உள்ளூர் மக்கள் மட்டும் அல்லாது மாவட்டத்தின் பிறபகுதி மக்கள், கேரளாவில் இருந்தும் பெண்கள் அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்று  வழிபாடு செய்தனர். பக்தர்கள் வசதிக்காக  அரசு சிறப்பு பஸ் வசதியும் செய்யபட்டிருந்தது. நிகழ்ச்சியை ஒட்டி அவ்வையார் அம்மனுக்கு பெண்கள் கூழ் வைத்தும் அதிகாலையிலேயே கோயில் வளாகத்திலும், அருகில் உள்ள தென்னந்தோப்புகளிலும் பெண்கள் அடுப்பு வைத்து சர்க்கரை கொளுக்கட்டை, உப்பு கொளுக்கட்டை போன்ற இரு வகையான கொளுக்கட்டைகள் அவித்து அம்மனுக்கு வைத்து வழிபட்டனர்.  சிறப்பு பூஜைகள். அலங்காரம், அன்னதானம் நடந்தது.