நீட் தேர்வுக்கு காங்., அரசே காரணம் அமைச்சர் செல்லுார் ராஜு குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 14 ஜூலை 2019 05:35

திருச்செந்துார்:

நீட் தேர்வுக்கு காரணமே முந்தய காங்கிரஸ் அரசுதான் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லுார் ராஜு கூறினார்.

 திருச்செந்துார் நகர கூட்டுறவு வங்கி 1919-ம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது 2019-ம் ஆண்டில் நுாற்றாண்டு விழா கொண்டாடுகிறது. நுாற்றாண்டு விழா வங்கி முன் நேற்று நடந்தது. விழாவில் வங்கி தலைவர் கோட்டை மணிகண்டன் வரவேற்றார். கலெக்டர் சந்தீப் நந்துாரி தலைமை வகித்தார். இதில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

 கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜு நுாற்றாண்டு விழா மலரை வெளியிட்டு கூட்டுறவுத்துறையின் சாதனைகள் குறித்து பேசினார்.

 விழாவுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லுார் ராஜு  கூறியதாவது:

 நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதே காங்.,– தி.மு.க., கூட்டணி அரசுதான். தமிழகம் விரும்பாத இந்த நீட் தேர்விற்கு சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க., தடை கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் ஆஜராகி தடை உத்தரவு பெற்றது முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம்தான்.

 அ.தி.மு.க., மதவாத கட்சி கிடையாது., முஸ்லிம்கள் மெக்கா செல்லவும், கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும் அ.தி.மு.க., அரசு நிதி ஒதுக்கி, அந்த நிதி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

 தி.மு.க., கடந்த காலங்களில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. அப்போது பா.ஜ., மதவாத கட்சியாக தெரியவில்லையா?

 துாத்துக்குடியில் 634 கோடி ரூபாயில் கடல் நீரை குடிநீராகும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்

என்று செல்லுார் ராஜு கூறினார்.

 அப்போது குறிக்கிட்ட நிருபர் ஒருவர், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆலந்தலை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்னவானது என்று கேட்டதற்கு, அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளிக்கையில், இத்திட்டம் வேறு, ஆலந்தலை திட்டம் வேறு. இரண்டு திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.