மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு: 2 நாட்கள் நடக்கிறது!

பதிவு செய்த நாள்

21
பிப்ரவரி 2016
18:39

மதுரை: மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு 2 நாட்கள் நடக்கிறது.

மதுரை மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பாக, மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோரை கண்டறியும் கணக்கெடுப்புப்பணி ஏற்கனவே 2014-ம் ஆண்டு மாநில அரசால் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது விடுப்பட்ட நபர்கள் எவராவது இருப்பின் அவர்களை கணக்கெடுக்கும் பணி நடத்தப்பட உள்ளது. இக்கணக்கெடுப்பு பணியானது மதுரை நகரில் நாளை மறுநாள் (22-ந் தேதி) தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி ஆனையூர், பொன்னகரம் பிராட்வே, தங்கராஜர் சாலை, கோ.புதூர், அவனியாபுரம், ஐராவதநல்லூர், திருப்பரங்குன்றம், மேலவாசல் ஆகிய இடங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் நடக்கிறது.

இந்த கணக்கெடுப்பில் மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தவறாது கலந்து கொண்டு முழுமையான மற்றும் சரியான தகவல்களை அளிக்க வேண்டும். படிவங்களை பூர்த்தி செய்வதற்கு அலுவலர்கள் உதவி செய்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.