தர்மபிரபு படத்திற்கு இந்துமுன்னணி எதிர்ப்பு நெல்லையில் தியேட்டர் முற்றுகை போராட்டம்

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2019 01:07


திருநெல்வேலி:

நெல்லையில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘தர்மபிரபு’ படம் வெளியிடப்பட்ட தியேட்டரை இந்து முன்னியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நெல்லை ஜங்ஷனில் உள்ள தியேட்டரில் நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான ‘தர்மபிரபு’ படம்  திரையிடப் பட்டுள்ளது. இந்தப்படம் முழுவதிலும், இந்துக்களையும், இந்து தெய்வங்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக கூறி இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தர்மபிரபு படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை தியேட்டர் முன்பு, இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மாநில துணைத் தலைவர் வி.பி., ஜெயக்குமார் தலைமையில் இந்துமுன்னணியினர் தியேட்டரை முற்றுகையிட பேரணியாக சென்றனர். தியேட்டர் முன்பு அவர்களை போலீசார் வழிமறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ‘‘புகார் மனு அளித்தால் அதன்படி மேல்நடவடிக்கை எடுக்கப்படும்’’ என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்து முன்னணியினர் முற்றுகையை கைவிட்டனர்.

மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் குற்றாலநாதன்,நெல்லை கோட்டத் தலைவர் தங்க மனோகர், நிர்வாகிகள் சங்கர், சுடலை, இசக்கிமுத்து, ராமச்சந்திரன், இசக்கிராஜா, மாருதிராஜன், சங்கர், வேல் ஆறுமுகம், தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.,ஜெயக்குமார் கூறுகையில்,‘‘இந்து தெய்வங்களை இழிவுபடுத்தி வந்துள்ள இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும். திரைப்படம் வெளியிடுவதற்கு அனுமதி அளித்த தணிக்கைத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.