தமிழக கடலோர காவல் குழுமத்தின் 25வது ஆண்டு விழா: டிஜிபி ராஜேந்திரன் துவக்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2019 10:19

சென்னை,             

தமிழக கடலோர காவல் குழுமத்தின் 25வது ஆண்டு விழா சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் நடந்தது. டிஜிபி ராஜேந்திரன் விழாவை துவக்கி வைத்தார்.

தமிழக காவல்துறையில் கடலோர காவல்படைக்குழுமத்தின் 25 வது ஆண்டின் துவக்க விழா நிகழ்ச்சி நேற்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் நடந்தது.

இந்த விழாவில் டிஜிபி ராஜேந்திரன் கலந்து கொண்டு துவக்கி வைத்து, கடலோர பாதுகாப்பு பற்றிய கையேட்டினை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, கடலோர காவல்படை ஏடிஜிபி வன்னியபெருமாள், டிஐஜி பவானீஸ்வரி மற்றும் எஸ்பி செல்வநாகரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு தமிழக கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவகிராமங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் நல்லுறவு கூட்டங்கள், மாணவர்கள் கட்டுரை, விளையாட்டுப்போட்டிகள், மருத்துவ முகாம்கள் 7 நாட்களுக்கு நடைபெறுகின்றன.

கடலோர பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு குறித்த துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கடலோர காவல்படை குழும போலீசார் தெரிவித்தனர்.