இந்த ஆண்டு ரூ. 9 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்: 1000 பேர் கைது

பதிவு செய்த நாள் : 25 ஜூன் 2019 00:49


சென்னை:

இந்த ஆண்டு ரூ. 9 கோடி மதிப்பிலான ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் கூடுதல் டிஜிபி ஷகில்அக்தர் தெரிவித்தார்.

உலக போதை பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த கண்காட்சியை காவல்துறை கூடுதல் டிஜிபி ஷக்கில் அக்தர் தொடங்கி வைத்தார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது, ‘

‘இளைய தலைமுறையினரால்தான் போதை இல்லாத சமூகத்தை உருவாக்க முடியும். பள்ளி மாணவர்களிடையே இது குறித்த விழிப்புணர்வு சென்றடைந்தால்தான் அனைத்து தரப்பு மக்களும் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு பெற முடியும். தமிழக போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் கடந்த 2018ம் ஆண்டு கஞ்சா, ஹெராயின், கோகைன் உள்ளிட்ட சுமார் 7,000 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ. 15 கோடி. இதில் தொடர்புடைய 2,010 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் ரூ. 9 கோடி மதிப்பிலான சுமார் 2,000 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய ஆயிரம் பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.