தொடரும் சாரல் மழையினால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர்

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 01:53


குற்றாலம்:

தொடரும் சாரல் மழையினால் குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வறண்டு காணப்பட்ட புலியருவியில் நேற்று தண்ணீர் விழத்துவங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை கடந்த 2 தினங்களுக்கு முன் துவங்கிவிட்ட நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. வறண்டு கிடந்த அருவிகளுக்கு தண்ணீர் படிப்படியாக வரத்துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அருவிகளில் தண்ணீர் சற்று அதிகமாக விழுந்தவண்ணம் உள்ளது.

நேற்று குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பரவலாக மழை பெய்தவண்ணம் இருந்தது. பலத்த காற்றுடன் சாரல் மழையும் அவ்வப்போது பெய்ததால் அருவிகளுக்கு வரும்தண்ணீர் சற்று அதிகமாக காணப்பட்டது. மெயினருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தகுளியலை அனுபவித்தனர்.

இதனிடையில் வறண்டு காணப்பட்ட புலியருவியிலும் நேற்று தண்ணீர் விழத்துவங்கியதைஅடுத்து இந்த அருவிக்குளியலை அனுபவிக்க கூடிய சிறுவர் சிறுமியர் புலியருவி பகுதியில் சற்று அதிகமாக காணப்பட்டனர்.