திரிபாதி பக்கம் வீசும் அதிர்ஷ்டக்காற்று! அவருக்கே சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி கிட்டுகிறதாம்!

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 01:21


தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன் இந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவரையடுத்து சட்டம், ஒழுங்கு டிஜிபியாக வரப்போவது யார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. டிகே ராஜேந்திரனை அடுத்து சீனியாரிட்டியில் டிஜிபிக்கள் ஜாங்கிட், காந்திராஜன், திரிபாதி ஆகியோர் உள்ளனர். ஜாங்கிட் ஆகஸ்ட் மாதமும், காந்திராஜன் செப்டம்பர் மாதமும் ஓய்வு பெறுகின்றனர். ஆகையால் அவர்களிருவருக்கும் டிஜிபி ஆகும் தகுதி இல்லை. அதே போல ஆஷிஸ்பெங்க்ராவும், ரமேஷ்குடவாலாவும் இந்த மாதம் ஓய்வு பெறுகின்றனர். அதனால் அவர்களும் தகுதி இழந்து விட்டனர். திரிபாதிக்கு இன்னும் ஓராண்டுகள் பணிக்காலம் உள்ளதால், அவர் டிஜிபி ஆவதற்கு முழுதகுதி பெறுகிறார். அதே போல 1986ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான ஜாபர்சேட், ஸ்ரீலட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, எம்கே ஜா, தமிழ்செல்வன், ஆஷிஸ் பெங்க்ரா அவர்களையடுத்து 1987ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான சைலேந்திரபாபு, கன்சின்கா, பிரதீப்வி பிலிப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகியோர் உட்பட மொத்தம் 14 டிஜிபிக்களின் பெயர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு டில்லியில் உள்ள யூபிஎஸ்சி ஆணையத்துக்கு தமிழக அர பரிந்துரைக்கப்பட்டது.

இவர்களில் அசுதோஷ் சுக்லா கடந்த பார்லி தேர்தலில் ஆளுங்கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக காரணம் காட்டி மண்டபம் முகாமுக்கு தூக்கியடிக்கப்பட்டார். மீதம் உள்ளவர்களில் சட்டம், ஒழுங்கு டிஜிபி பதவிக்கு சிபிசிஐடி டிஜிபியாக உள்ள ஜாபர்சேட்டின் பெயர் அடிபட்டது. ஆனால் அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் பதவிக்கு வந்ததால் அவருக்கும் டிஜிபி பதவி பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாம். மேலும் டெலிபோன் டேப் விவகாரம், அதிமுகவினரின் போனை ஒட்டு கேட்டது, சாதிக்பாட்சா விவகாரம் மீண்டும் கிளம்பியது போன்ற பல குற்றச்சாட்டுகளால் துணைமுதல்வர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதும் ஜாபர்சேட்டின் பதவிக்கு தடை ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவுகின்றன. மேலும் பார்லி தேர்தல் தோல்வியால் சட்டம், ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்ட விஜயகுமார் மீதும் அதிருப்தி ஏற்பட்டதால் அவருக்கும் வாய்ப்பு பறிபோனது. 

தற்போது டிஜிபி டிகே ராஜேந்திரன் ஓய்வு பெறும் தேதி நெருங்குவதையடுத்து புதிய டிஜிபியாக யாரை நியமிப்பது என்று தமிழக அரசு தீவிர ஆலோசனையில் உள்ளது. தமிழக அரசு அனுப்பியுள்ள 14 டிஜிபிக்களில் மத்திய அரசு தேர்ந்தெடுத்து அனுப்பும் 3 டிஜிபிக்களில் ஒருவரை சட்டம், ஒழுங்கு டிஜிபியாக தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் தமிழக அரசு திரிபாதியை டிஜிபியாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய அரசில் இருந்து உத்தரவு வந்ததும் திரிபாதியை டிஜிபியாக அமர்த்துவதற்கு தமிழக அரசு தயாராகியுள்ளதாம்.