சென்னை ஜவுளிக்கடைகளில் பட்டுப்புடவைகள் திருட்டு:டில்லி பெண்கள் உள்பட 6 பேர் கும்பல் கைது

பதிவு செய்த நாள் : 13 ஜூன் 2019 01:20


சென்னை:

சென்னை திநகரில் உள்ள ஜவுளிக்கடைகளில் தொடர்ந்து பட்டுப்புடவைகளை திருடிய டில்லி பெண்கள் உள்பட 6 பேர் கும்பலை  போலீசார் கைது செய்தனர்.

சென்னை திநகரில் உள்ள பிரபல பட்டுப்புடவைகள் ஷோரூமுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் பட்டுப்புடவை எடுக்க வந்தனர். நீண்ட நேரம் புடவைகளின் மாடல்களை பார்த்த அவர்கள் பின்னர் எந்த புடவையும் எடுக்காமல் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு அன்றைய தினம் புடவைகளின் இருப்பை ஆய்வு செய்த போது ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவைகள் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக புடவை கடை ஊழியர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவை போட்டுப்பார்த்த போது அன்றைய தினம் வந்த 6 பேர் கும்பல் பட்டுப்புடவைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிசிடிவி கேமராவில் அந்த கும்பலின் உருவத்தை வைத்து அதன் மூலம் அவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பாண்டிபஜாரில் உள்ள மற்றொரு ஜவுளிக்கடையில் அதே கும்பல் பட்டுப்புடவை எடுக்க வந்திருந்தனர். நீண்ட நேரமாக அங்கு நின்று கொண்டிருந்த அவர்கள் பட்டுப்புடவையை திருட முயன்றுள்ளனர். இதனால் உஷாரடைந்த கடை ஊழியர்கள் அவர்களை மடக்கிப்பிடித்தனர். அது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று 6 பேரையும் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள்

டில்லியை சேர்ந்த ராம்குமார், திம்பு, தீபாஞ்சலி, பீனா, சுனிதா என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து  

டில்லி பதிவெண் கொண்ட காரையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பின்னர் 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.