சென்னை மெரீனாவில் களைகட்டிய பைக் ரேஸ்: கல்லுாரி மாணவர் பலி: 15 பேர் மீது வழக்குப் பதிவு

பதிவு செய்த நாள் : 03 ஜூன் 2019 10:30

சென்னை,        

சென்னை மெரீனாவில் நேற்று அதிகாலையில் பைக் ரேஸில் கலந்து கொள்வதற்காக நண்பனுடன் பைக்கில் அமர்ந்து சென்ற கல்லூரி மாணவர் கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். பைக் ரேஸ் சென்ற 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மெரீனாவில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை பைக்ரேஸ் களை கட்டியது. காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட இடங்களில் வாலிபர்கள் பைக்குகளில் சர்சர்ரென பறந்து சென்றனர். இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் அது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து மெரீனா போக்குவரத்துப் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு 15 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பைக் ரேசில் ஈடுபட்ட 12 வாலிபர்களை மடக்கிப்பிடித்து அபராதம் விதித்தனர்.

சென்னை, சூளை, பட்டாளம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் சாந்தகுமார் (வயது 19). வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். ரவி சென்னை மாநகராட்சியில் ஊழியராக உள்ளார்.

இன்று அதிகாலை 6.45 மணியவில் மெரீனா பீச்சில் சென்று கிரிக்கெட் விளையாடுவதற்காக சாந்தகுமார் தனது கல்லூரி நண்பர் பாலாஜியுடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார். மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் வந்தபோது திடீரென பைக் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது.

இதில் பின்னால் அமர்ந்திருந்த சாந்தகுமார் தவறி கீழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. பாலாஜிக்கும் ஹெல்மெட் போடாததால் தலையில் பலத்த அடிபட்டது. அங்கிருந்தவர்கள் அவரை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாலாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அண்ணாசதுக்கம் போக்குவரத்துப்புலனாய்வுப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சாந்தகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பாலாஜி பைக்ரேஸில் கலந்து கொண்டதால் பைக்கை வேகமாக ஓட்டி வந்ததாகவும் அதனால் பைக்கில் இருந்து சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.  ஆனால் சாந்தகுமாரின் உறவினர்கள் கிரிக்கெட் விளையாட வந்த போது மாநகர பஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பைக் ரேஸ் பழக்கம் அவர்களுக்கு கிடையாது எனதெரிவித்தனர்.

விபத்துக்கு காரணமான பஸ் ஓட்டுநரை போலீசார் கண்டுபிடித்து  கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு பேருந்து மோதியதால் விபத்து ஏற்பட்டதா அல்லது இருசக்கர வாகனத்தை அதிவிரைவாக ஒட்டியதால் ஏற்பட்டதா என்று போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் மெரீனா கடற்கரை சாலையில் காலையில் இன்று அதிகாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மற்றொரு விபத்தில் வாலிபர் பலி:

இதே போல சென்னை, பிராட்வே, காக்காதோப்பைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் தீபக் (22). அதே பகுதியைச் சேர்ந்த சீனுவாசன் (21) இருவரும் பல்சர் பைக்கில் அண்ணாசாலையில் சென்ற போது முன்னாள் சென்ற அண்ணாநகரைச் சேர்ந் பிரதீஸ் என்பவரது கார் மீது பைக் மோதியது. இதில் சீனிவாசன் பலியானார். தீபக் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை  போக்குவரத்துப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக் ரேஸில் ஈடுபட்ட 15 பேர் மீது வழக்கு

சென்னை காமராஜர் சாலையில் நேற்று மாலை வாலிபர்கள் பைக்ரேஸ் நடத்தியதால் மெரீனா பீச் ரோடு, ராதாகிருஷ்ணன் ரோடு உள்ளிட்ட இடங்களில் பைக்குகள் சர்சர்ரென சாலைகளில் பறந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும் மெரீனா போக்குவரத்துப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த பைக்குகளை மடக்கிப் பிடித்தனர். பைக் ரேஸ் நடத்திய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.