ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பு !

பதிவு செய்த நாள் : 20 மே 2019 00:04


ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் நேற்று காலையில் இருந்து மாலை வரை விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. கொளுத்திய வெயிலை புறந்தள்ளி விட்டு மக்கள் மிக ஆர்வமாக ஓட்டளித்தனர்.   ஓட்டு போட்டு திரும்பிய முதியவர் வெயில் கொடுமை தாங்க முடியாமல் ஓட்டுச்சாவடி அருகே   மயங்கி விழுந்து இறந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ௧௦௧ வயது மூதாட்டி ஓட்டு போட்டுள்ளார்.

காலை 6 மணிக்கே வாக்காளர்கள் ரெடி!

பெண்களை விட ஆண்கள் ஆர்வம்

ஓட்டப்பிடாரம் சட்டசபை இடைத்தேர்தல் நேற்று நடந்தது. மொத்தம் உள்ள ௨௫௭ ஓட்டுச்சாவடிகளில் காலை ௭ மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் காலை ௭ மணிக்கு முன்பாக ௬ மணிக்கெல்லாம் வாக்காளர்கள் திரண்டிருந்தனர்.   பொதுவாக பெண்கள் தான் ஓட்டு போட ஆர்வமாக அதிகம் வருவார்கள். ஆனால் ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் வித்தியாசமாக பெண்களை விட ஆண்கள் மிக அதிக ஆர்வத்துடன் ஓட்டளிக்க வந்திருந்தனர். ௧௧ மணிக்கு பிறகு பெண் வாக்காளர்கள் அதிகமாக ஓட்டு போட வந்தனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதி கவர்னகிரி கிராமத்தில் உள்ள டி.என்.டி.டி.ஏ., ஆரம்பப்பள்ளி ஓட்டுச்சாவடியில் அ.தி.மு.க., வேட்பாளர் மோகன் தனது மனைவி கனகலட்சுமி, தங்கை கற்புக்கரசி ஆகியோருடன் வந்து வரிசையில் நின்று ராகுகாலம் முடிந்த பின்னர் ௭.௩௫ மணிக்கு ஓட்டுப்போட்டார்.  இந்த ஓட்டுச்சாவடியில் மொத்தம் ௧௧௪௯ ஓட்டுகள் உள்ளது. ஓட்டுப்பதிவு துவங்கிய அரை மணி நேரத்தில் ஏழரை மணிக்கு ௭௨ ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது.   

கொளுத்தும் வெயிலை புறந்தள்ளிய மக்கள்:

ஓட்டப்பிடாரம் மெக்காவாய் மேல்நிலைப்பள்ளியில் நான்கு ஓட்டுச்சாவடிகள் உள்ளது. இந்த பள்ளியில் காலை ௮ மணிக்கு ஓட்டுப்போட நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ௮.௧௦ மணி நிலவரப்பட்டி இந்த ஓட்டுச்சாவடியில் மொத்தம் உள்ள ௧௨௪௯ ஓட்டுகளில் ௬௭ பேர் ஓட்டளித்திருந்தனர். காலை ௮.௪௦ மணியளவில் குக்கிராமமான குலசேகரநல்லுார் ராமகிருஷ்ணன் ஆரம்பப்பள்ளியில் மொத்தம் உள்ள ௧௨௫௨ ஓட்டுக்களில் ௧௨௧ ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. நேற்று காலை ௯ மணிக்கெல்லாம் மிக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் அதனை எல்லாம் புறந்தள்ளி விட்டு ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் வாக்காளர்கள் ஓட்டுப்போட மிக ஆர்வத்துடன் காணப்பட்டனர்.

ஐரவன்பட்டியில் பவர் கட்

திமுக வேட்பாளர் உடனடி ஆக் ஷன்!

ஐரவன்பட்டி டி.என்.டி.ஏ .,தொடக்கப்பள்ளியில் தி.மு.க., வேட்பாளர் சண்முகையாக ஓட்டு போடுவதற்கு காலை ௯.௧௦ மணிக்கு வந்தார். ஓட்டு போட வரிசையில் காத்திருந்தார். அப்போது ஓட்டுச்சாவடியில் மின்சாரம் இல்லாததால் இருட்டில் ஊழியர்கள் தவித்தனர். ஓட்டுப்போட வருவோரும் மிகவும் சிரமப்பட்டனர். உடனடியாக இது குறித்த தகவல் வரிசையில் நின்ற வேட்பாளர் சண்முகையாவின் கவனத்திற்கு வந்தது. அவர் உள்ளே சென்று விசாரித்தார். காலையில் இருந்தே மிக லோவோல்டேஜ் ஆக இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் பேசினார்.

விரைவாக வந்து அதனை சரி செய்வதாக குறிப்பிட்டனர். ஆனால் மின்வாரியத்தில் இருந்து அரைமணி நேரத்திற்கு மேலாகியும் ஆட்கள் யாரும் வரவில்லை. இதனை தொடர்ந்து தி.மு.க,, வேட்பாளர் சண்முகையா ஓட்டு போட்டார்.   வேட்பாளர் அண்ணன் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட ஐரவன்பட்டி முருகேசன் அங்கு வந்து அந்த கிராம மக்களிடம் பேசிவிட்டு சென்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ விசிட்!

தி.மு.க., வேட்பாளர் ஓட்டு போட்டு விட்டு வெ ளியே கட்சியினரிடம் பேசிக் கொண்டிருந்த போது அமைச்சர் கடம்பூர் ராஜூ அந்த கிராமத்திற்கு வந்து அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணிகள் குறித்து பார்வையிட்டார். இதுவரை ௩௦க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு சென்று பார்வையிட்டு விட்டதாகவும், அ.தி.மு.க.,விற்கு வெற்றி பிரகாசமாக இருப்பதாக தெரிவித்தார். நெல்லை ஆவின் உறுப்பினர் நீலகண்டன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

புதுப்பட்டி ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டு விட்டு வயதான மூதாட்டி சண்முகம் அம்மாள் புதுப்பட்டி காலனி பகுதியில் தனவு வீட்டிற்கு கம்பு ஊனிக் கொண்டு நடந்து வந்தார். அவரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டதற்கு எங்கள் வீட்டில் மூன்று ஓட்டு உள்ளது. நான் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டு வருகிறேன். ஓட்டு போட போகும் போது என்னை பைக்கில் அழைத்து சென்றனர். இப்போது அங்கு வேலை இருக்கிறது என்று சொல்லி என்னை நடந்து வீட்டிற்கு செல்கிறேன் என்றார்.  புதுப்பட்டி காலனியை சேர்ந்த மூதாட்டி செல்வபாக்கியம்   வந்தார்.அவரிடம் கேட்டபோது   காலையிலே ஓட்டு போட போய்விட்டேன்   தனக்கு ஓட்டு போட யாரும் பணம் கொடுக்கவில்லை என்று கூறினார்   

புதியம்புத்துாரில் காலையில் டல்

புதியம்புத்துார் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் காலை ௧௦.௫௫ மணியளவில் ஓட்டுச்சாவடியில் சுத்தமாக கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. காலையிலே இங்கு கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அதன் பிறகு டல் அடித்தது. ௫௧வது ஓட்டுச்சாவடியில் மொத்தம் உள்ள ௮௨௬ ஓட்டில் ௨௭௩ ஓட்டு பதிவாகி இருந்தது. இதில் ஆண்கள் ௧௩௦ பேரும், பெண்கள் ௧௪௩ பேரும் ஓட்டளித்திருந்தனர்.

அதிமுக மாவட்டச்செயலாளர் ஆய்வு!

ஓட்டப்பிடாரம் தொகுதியில் பல்வேறு இடங்களில் ஓட்டுப்பதிவு எப்படி நடக்கிறது என்பதை அ.தி.மு.க.,வினரிடம் சென்று தெற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எஸ்.பி., சண்முகநாதன் ஆய்வு செய்தார். புதியம்புத்துாரில் உள்ள ஓட்டுச்சாவடி அருகே அ.தி.மு.க.,வினர் திரண்டிருந்த பகுதிக்கு வந்த சண்முகநாதன் அங்குள்ள நிலவரங்களை கேட்டார். அவருடன் முன்னாள் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பி.ஏ., ஆறுமுகநயினார் உடனிருந்தார்.சண்முகநாதன் கூறுகையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க,, மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பதை நாங்கள் ஓட்டுச்சாவடி அருகே சென்று பார்க்கும் போதே தெரிந்து விட்டது. இரட்டை இலை வெற்றி பெற்று விட்டது என்று சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு பிரகாசமான வெற்றி இந்த தொகுதியில் அ.தி.மு.க.,விற்கு இருக்கும். அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்து வரும் இந்த தொகுதி மீண்டும் இரட்டை இலையின் கோட்டை என்பதை நிரூபிக்கும் என்றார்.நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, ஊராட்சி செயலாளர் ராஜா, அர்ச்சுனன், ரவி, இசக்கி மற்றும் பாலஜெயம், சாம்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.  

ஓட்டப்பிடாம் பள்ளியில் திடீர் பரபரப்பு!

ஓட்டப்பிடாரம் மெகாவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் காலை ௧௧. ௨௦ மணிக்கு ஓட்டளித்தார். இந்த ஓட்டுச்சாவடிக்குள் தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டை பெற்றிருப்பவர்களை கூட அனுமதிக்க முடியாது என்று முதலில் போலீசார் தகராறு செய்தனர். பின்னர் அனுமதித்தனர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவரை போலீசார் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும் பத்திரிக்கையாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸ் அதிகாரிகள் வந்து சமரசம் செய்ததால் பிரச்னை ஓய்ந்தது. ஒட்டநத்தம் ஓட்டுச்சாவடியில் ௧௦௧ வயது இசக்கியம்மாள் தள்ளாடிய நிலையில் வந்து ஓட்டளித்தார். இதனை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

ஓட்டுப்போடவந்தவர் மயங்கி விழுந்து பலி!

ஓட்டு போட்டு விட்டு ஓட்டுச்சாவடியை விட்டு வெ ளியே வந்த நபர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஞ்சாலங்குறிச்சி அருகே உள்ள சிலோன் காலனியில் ௪௩ம் எண் ஓட்டுச்சாவடியில் ஓட்டு போட்டு விட்டு மாடசாமி (௬௦) வந்தார். ஓட்டுச்சாவடியில் இருந்து ௧௦௦ மீட்டர் கோடு போட்டிருந்த இடம் வரை வந்த அவர் அப்படியே தரையில் அமர்ந்தார். அங்கிருந்தவர்கள் ஒடிச்சென்று பார்த்த போது அவர் இறந்து விட்டார். கடும வெயிலில் அவர் வந்துள்ளார். ஓட்டு போட்டு விட்டு செல்லும் போது வெயிலின் தாக்கம் கூடுதலாக இருந்துள்ளது. வெயிலில் நின்ற படி நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார். அவர் ஏற்கனவே உடல் நலக்குறைவில் இருந்ததால் இறந்து விட்டதாக அவர் இறந்திருக்க கூடும் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.இதனால் ஓட்டுச்சாவடி முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

வெற்றிபெறுவோம்…!

அ.தி.மு.க., வேட்பாளர் மோகனை ௨௦௦ மீட்டர் தாண்டி வந்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்தினர் பேட்டி கண்டனர். பேட்டி எதுவும் வேண்டாம் என்று கூறியவர் ஓட்டப்பிடாரம் தொகுதி என்றைக்கும் அ.தி.மு.க.,வின் கோட்டை. இதனால் இரட்டை இலையின் வெற்றி மிகப் பெரிய அளவில் இருக்கும் என்றார். 

50ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்!

ஓட்டு போட்டு விட்டு வெ ளியே வந்த தி.மு.க., வேட்பாளர் சண்முகையா நிருபர்களிடம் கூறியதாவது;ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில் இருந்துள்ளது. இந்த தொகுதியை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மக்களின் அடிப்படை வசதிகளை கூட அவர்கள் செய்யவில்லை. பல்வேறு கிராமங்களில் கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதனை பற்றி ஆளும் கட்சியினர் கண்டு கொள்ளவில்லை.

இதனால் அவர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதனால் கனிமொழி ௨ லட்சம் ஓட்டுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நான் ௫௦ ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் உறுதியாக ஜெயிப்பேன். என்றார்.

ஒட்டுமொத்த ஆதரவும் எங்களுக்குதான்

ஓட்டு போட்டு விட்டு   வந்த அமமுக  வேட்பாளர் சுந்தர்ராஜ்   நிருபர்களிடம் கூறியதாவது; எங்களது வெற்றி ஏற்கனவே உறுதியாகி விட்ட நிலையில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. ௫௦ ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். இ.பி.எஸ்., ஆட்சி ஒழிய வேண்டும் என்று மக்கள் ஒட்டு மொத்தமாக முடிவெடுத்திருக்கின்றனர். ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னேற வேண்டும் என்றால் அமமுக வெற்றி பெற்றால் தான் நடக்கும் என்கிற முடிவுக்கு தொகுதி மக்கள் வந்து விட்டனர்.  ஜெ.,யால் புறக்கணிக்கப்பட்ட ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்டோருடன் கூட்டணி சேர்ந்தது எல்லாம் மக்களுக்கும் பிடிக்கவில்லை. அ,தி.மு.க.,வினருக்கும் பிடிக்கவில்லை.  துரோகத்திற்கு என்றைக்கும் தமிழக மக்கள் எதிராகத்தான் இருப்பார்கள். ஒட்டு மொத்த ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களும் எங்களுக்கு தான் ஆதரவு தருவதால்   வெற்றி பெறுவது உறுதி.இவ்வாறு சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

புதிய மாற்றம் வேண்டும்…!

இந்த ஓட்டுச்சாவடியில் முதல் முறையாக ஒட்டு போட வரும் பெண் வாக்காளர் திவ்யாவிடம் முதல், முதலாக ஓட்டு போட வருகிறீர்கள். இதனை எப்படி நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நமக்கும் ஓட்டுரிமை கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியுடன் நம் முதல் ஓட்டு புதுமையான முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வருவோருக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் பி.காம் முடித்திருக்கிறேன். தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளையும் விடுத்து புதிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிற எண்ணத்தில் நான் ஓட்டு போடப்போகிறேன் என்றார்.