அணைத்தண்ணீர் திறப்பால் மூழ்கியது தரைப்பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்ற வாலிபர் மீட்பு

பதிவு செய்த நாள் : 13 மே 2019 23:53


திருவட்டார்:

 பேச்சிப்பாறை அருகே தண்ணீரில்  சிக்கி உயிருக்கு போராடிய தொழிலாளியை  பொதுமக்கள் மீட்டனர்.

குமரி மாவட்டத்தில் கோதையாறு மின் நிலையங்கள் கடந்த 4 மாதங்களாக இயங்காமல் இருந்தன.. இந்நிலையில் மின் நிலையம்  1 பழுது பணி நிறைவடைந்த நிலையில் நேற்று இயக்கப்பட்டது. அதே வேளையில் மின் நிலையம் 2 இயக்கப்படவில்லை. இதையடுத்து மின்நிலையம் 1 இல் இருந்து வெளியேறும் தண்ணீர் கீழ் கோதையாறு அணையை நிரம்பியது.  இதனால்  கீழ் கோதையாறு அணையிலிருந்து உபரி நீர் நேற்று இரவு 9 மணி அளவில் திறக்கப்பட்டது.

கீழ் கோதையாறு அணையிலிருந்து தண்ணீர்  திறக்கப்பட்டதால் அந்த அணையிலிருந்து வெளியேறிய  தண்ணீர் மோதிரமலை-குற்றியாறு சாலையிலுள்ள தரைப் பாலத்தை மூழ்கடித்து பாய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் குளச்சலிலுள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வரும்  குற்றியாறு பகுதியைச் சேர்ந்த  ஷிபு (36) வழக்கம் போல இரவில்  பைக்கில்  தரைப்பாலத்தினை  கடக்க முயன்றார். இருளில் தரைப்பாலத்தை மூழ்கடித்து அதிக அளவில் தண்ணீர்  செல்வதை அவரால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து தண்ணீர் அவரை அடித்துச் சென்றது. அவருக்கு நீச்சல் தெரிந்ததால் ஆற்றுப் பகுதியில் செடிகளை பிடித்துக் கொண்டு கூச்சல் போட்டார். அப்போது அந்தப் பகுதியில் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தவர்கள் ஊரில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் கயிறுகளுடன் விரைந்து வந்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த ஷிபுவை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்க்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

போதிய அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்ததால் தான் இந்த லிபத்து நடந்தது என மக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கீழ் கோதையாறு அணையிலிருந்து உபரி தண்ணீரை திறக்கும் போது அலாரம் சப்தம் எழுப்பி பொது மக்களை உஷார்படுத்த  வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.