மதுரையில் ஒரே வழித்தடத்தில் எதிர் எதிரே ௨ பயணிகள் ரயில்கள்: 3 பேர் பணியிடை நீக்கம்

பதிவு செய்த நாள் : 10 மே 2019 15:55

மதுரை,

மதுரையில் ஒரே வழித்தடத்தில் எதிரெதிரே 2 பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்ட விவகாரத்தில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

மதுரையிலிருந்து செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயில் நேற்று மாலை 5.40 மணிக்கு திருமங்கலம் ரயில் நிலையம் வந்தது. பின்பு சுமார் 1 மணி நேரம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டதால் பயணிகள் கூச்சலிட்டனர். இதன் பிறகு அந்த ரயில் புறப்பட்டது. 

சுமார் 200 மீட்டர் தூரம் ரயில் சென்ற நிலையில், செங்கோட்டையிலிருந்து மதுரைக்கு வரும் ரயில் வந்துகொண்டிருந்தது.

இதனால் 2 பயணிகள் ரயில்களும் நேருக்குநேர் மோதும் அபாயம் ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த ரயில்வே கேட் கீப்பர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தன் பேரில் மதுரை - செங்கோட்டை ரயில் நிறுத்தப்பட்டு மீண்டும் திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அங்குள்ள கதவுகளையும் சேதப்படுத்தினர். இதையடுத்து சுமார் 2 மணிநேரம் தாமதமாக இரவு 7.30 மணிக்கு மதுரை செங்கோட்டை ரயில் புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் ஈரோடு, மயிலாடுதுறை - திருநெல்வேலி ரயில் இரவு 7.30 மணிக்கு திருமங்கலம் வந்தது. 

தூத்துக்குடி, விருதுநகர் வழியாக மதுரை செல்லும் ரயில்களுக்காக திருநெல்வேலி ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. 

2 மணி நேரத்திற்கு அதிகமாக ரயில் நின்றதால் அதிலிருந்த பயணிகள் பலர் பேருந்துகள் மூலம் நெல்லைக்கு புறப்பட்டுச் சென்றனர்.

2 ரயில்கள் நேருக்குநேர் மோதும் விபத்து தடுக்கப்பட்டாலும், சிக்னல் பிரச்னையால் ரயில்கள் தாமதமானதால் முதியவர்கள், பெண்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதியடைந்தனர். மதுரையில் ஒரே வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டதற்கு மொழிப் பிரச்னையே காரணம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

1 வழிதடத்தில் 2 ரயில்கள்  விவகாரத்தில் கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங் மீனா, 

திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், 

திருமங்கலம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் முருகானந்தம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.