பார்வையில்லா மாற்றத்திறனாளியை 40 நாட்களாக அலையவிட்ட எஸ்ஐ சஸ்பெண்டு: கமிஷனர் நடவடிக்கை

பதிவு செய்த நாள் : 09 மே 2019 15:13

சென்னை,          

பார்வையில்லா மாற்றத்திறனாளியை 40 நாட்களாக அலைய விட்ட போக்குவரத்துப் போலீஸ் எஸ்ஐயை சஸ்பெண்டு செய்து போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை, ஷெனாய் நகர் குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது 50). இவரது மனைவி மேரி (45). இருவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். அந்தோணியும், மேரியும் பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டு தளங்களில் பாடல்கள் பாடி யாசகம் பெற்று குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அந்தோணியின் மனைவி மேரிக்கு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அந்தோணி, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தேவாலயத்திற்கு சென்று பாட்டுபாடி யாசகம் பெறுவதற்காக சென்றுள்ளார். அப்போது சாலையோரமாக நின்றிருந்த அந்தோணி மீது அந்த வழியாக சென்ற மாநகர பஸ் ஒன்று வேகமாக வந்து மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அந்தோணிக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு சென்றுவிட்டனர். டாக்டர்கள் அந்தோணியின் கைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருந்தாலும் அவரால் முன்பு போல் பாட்டு பாடி யாசகம் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டுள்ளார்.

அந்தோணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றபோது அதுகுறித்து அங்குள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி ‘ஏஆர்’காப்பி எனப்படும் ‘விபத்துப் பதிவு”அறிக்கை மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இந்த விபத்தின் விசாரணை எல்லைப்பகுதியான அண்ணாநகர் போக்குவரத்துப்புலனாய்வு பிரிவு போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து விசாரணை நடத்தினர். அதோடு தங்கள் பணியை போலீசார் நிறுத்திக் கொண்டனர். அந்தோணி விபத்தில் சிக்கியது எப்படி? மோதிய வாகனம் எது? அதன் பதிவெண் மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் என வழக்குப்பதிவு செய்ய தேவையான எந்த நடவடிக்கையையுமே போலீசார் மேற்கொள்ளவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தோணி இது குறித்து நேற்று முன்தினம் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து புகார் மனு அளித்தார். அது தொடர்பாக விசாரணை நடத்தும்படி கமிஷனர் விஸ்வநாதன் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருணுக்கு உத்தரவிட்டார். இதில் மாற்றுத்திறனாளியின் விபத்து தொடர்பாக அண்ணாநகர் போக்குவரத்துப் புலனாய்வு போலீஸ் எஸ்ஐ மோகன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரியவந்தது.

கடந்த 40 நாட்களாக மாற்றுத்திறனாளி அந்தோணியை அலைய விட்டதுமின்றி விபத்து தொடர்பாக வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து எஸ்ஐ மோகனை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார்.