டிஆர்ஐ ரெய்டில் ரூ. 7.41 கோடி தங்கம் வெளிநாட்டு சிகரெட், செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பதிவு செய்த நாள் : 09 மே 2019 01:03


சென்னை:

சென்னையில் மத்திய வருவாய்ப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 7.41 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம், வெளிநாட்டு சிகரெட்டுக்கள், செம்மரக்கட்டை, அகல்வாய் கடல் சிப்பிகள் உள்பட பல்வேறு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

* துணி மூட்டைக்குள் செம்மரக்கட்டைகள்!

சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து வெளிநாட்டுக்கு கப்பல் மூலம் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக (மத்திய வருவாய்புலனாய்வுப் பிரிவு) டிஆர்ஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படையினர் சென்னை துறைமுகம் மற்றும் கிருஷ்ணாபட்டினம் துறைமுகம் பகுதிகளில் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது கப்பல்  தளங்களில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் ஒன்றை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்த போது உள்ளே 14 மெட்ரிக் டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். ஜவுளி மற்றும் உணவுப்பொருட்கள் பெயரில் அவை கப்பலில் ஏற்றுவதற்கு புக் செய்யப்பட்டிருந்தன. அதனை அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதன் மதிப்பு பல கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

* டயாப்பருக்குள் வௌிநாட்டு சிகரெட்டு

அதே போல கடந்த 2ம் தேதியன்று சென்னைத்துறைமுகத்தில் கப்பலில் கடத்திவரப்பட்ட ரூ. 4.5 கோடி மதிப்புள்ள 30 லட்சம் சிகரெட்டு பண்டல்கள் சிக்கின. குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் பேம்பர்ஸ் டயாப்பருக்குள் அவை பார்சல் செய்யப்பட்டிருந்தன. அதனை பறிமுதல் செய்து அதனை சென்னையில் பெறவிருக்கும் ஏஜெண்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


* அரிய வகை கடல் உயிரினம்

கடந்த 7ம் தேதியன்று டிஆர்ஐ அதிகாரிகளுக்கு, சென்னை ஏர்போர்ட்டில் அரிய வகை கடல் உயிரினங்கள் சிங்கப்பூருக்கு கடத்திச் செல்லப்படவிருப்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் தனிப்படையினர் சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடைமைகளை ஆய்வு செய்தனர். அப்போது சிங்கப்பூர் செல்ல முயன்ற ஒரெ குரூப்பைச் சேர்ந்த 6 பயணிகளின் சூட்கேசுகளை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதற்குள் 180 கிலோ எடையுள்ள 352 அரியவகை அகல்வாய் கடல் சிப்பிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனை வனக்குற்றப்பிரிவு அதிகாரிகள் துணையுடன் டிஆர்ஐ அதிகாரிகள் ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்தனர். அதனை கடத்த முற்பட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தினர். அவை அந்தமான் நிக்கோபார் தீவுகள், மன்னார்வளைகுடா பகுதிகளில் கிடைக்கக்கூடியவை. அவற்ளை வெளிநாட்டில் விற்பனை செய்தால் பல லட்சம் போகும் என்பதால் சிங்கப்பூருக்கு அவற்றை கடத்திச் செல்வதாக தெரிவித்தனர். அவர்களிடம் டிஆர்ஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* ஜீன்ஸ் பேண்ட்டுக்குள் தங்கக்கட்டிகள்

இதனையடுத்து நேற்று சென்னை எழும்பூர் ரயில் நலையத்தில் டிஆர்ஐ அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணித்த போது வடமாநிலத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது அஸ்ஸாம் மாநிலம் கோக்ரஜார் என்ற ஊரில் இருந்து வந்த வடமாநில பயணிகள் இருவரது சூட்கேசை சோதனையிட்டதில் உள்ளே ஒன்றும் இல்லை. இதனையடுத்து அவர்கள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட்டை தடவிப்பார்த்த போது உள்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7.968 கிலோ தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். அலுமினிய தகடுகளுக்குள் தங்கக்கட்டிகள் மறைத்து கடத்தி வந்துள்ளனர். தங்கத்தை பதுக்குவதற்கென்றே ஜீன்ஸ் பேண்ட்டின் உள்பகுதிக்குள் சிறிய சிறிய அறை வைத்து பாக்கெட்டுக்கள் தைத்து அதற்குள் மறைத்து வைத்து எடுத்து வந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி 61 லட்சம் ஆகும்.

இந்த வகையில் கடந்த 10 நாட்களில் டிஆர்ஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் பல கோடி மதிப்புள்ள கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து அது தொடர்பாக 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.