இலஞ்சி கோயில் வள்ளி யானை உடல் நல்அடக்கம்

பதிவு செய்த நாள் : 25 ஏப்ரல் 2019 03:02


குற்றாலம்,:

உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த வள்ளி யானையின் உடல் நேற்று நல்அடக்கம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் யானை வள்ளிக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

குற்றாலம் அருகில் பிரசித்தி பெற்ற இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலஞ்சி குமாரர் கோயிலுக்கு, கடந்த ௨௦௦௬ம் ஆண்டு கடம்பூர் ஜமீன்தார் ௨ யானைகளை வழங்கியுள்ளார். இந்த யானைகளுக்கு வள்ளி, தெய்வானை என பெயர் வைக்கப்பட்டது.

கோயிலில் வளர்க்கப்பட்ட யானைகளில் தெய்வானை என்ற யானை கடந்த ௨௦௦௮ல் இறந்தது. யானைகள் பராமரிப்பு குறைபாடு காரணமாகத்தான், தெய்வானை யானை இறந்ததாக அப்போது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் முருகபக்தர்கள் புகார் கூறினர்.

இக்கோயிலில் தொடர்ந்து இருந்து வந்த வள்ளி யானை பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வள்ளி யானைக்கு நீர் கட்டி இருந்து வந்ததாகவும், போதுமான பராமரிப்பு இல்லாததாலும் நேற்று முன்தினம் மாலை வள்ளி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையில் நடைப்பயிற்சிக்காக யானையை அழைத்து சென்றபோது, திடீரென கோயில் வெளிப்பிரகாரத்தில் வள்ளி யானை மயங்கி விழுந்து இறந்தது. வள்ளி யானை இறந்ததை அடுத்து பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி காணப்பட்டது.

நேற்று முன்தினம் இறந்த யானை வள்ளியின் உடல் குற்றாலம் வனச்சரகம் ஆரோக்கியசாமி, வனவர் பாண்டியராஜ், கால்நடை டாக்டர் (வனத்துறை) டாக்டர்கள் சுகுமார், அர்னால்டு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து தென்காசி எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, பண்பொழி கோயில் உதவி ஆணையர் அருணாசலம், தென்காசி கோயில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன், மேலகரம் கூட்டுறவு சொசைட்டி தலைவர் சண்முகசுந்தரம், இலஞ்சி அதிமுக செயலாளர் மயில்வேலன், அன்னமராஜா, இலஞ்சி மாரியப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து யானை வள்ளியின்  உடல் கோயில் அருகிலுள்ள பகுதியில் நல்அடக்கம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் சார்பில் குற்றாலம் போலீசாருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில்,

இலஞ்சி குமாரர் கோயில் யானை இறந்தது தொடர்பான காரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.