துண்டு துண்டாக வெட்டப்பட்ட சந்தியாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2019 21:15

சென்னை, ஏப். 7–

சென்னை பள்ளிக்கரணை குப்பைக்கிடங்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நாகர்கோவில் சந்தியாவின் உடல் மருத்துவப்பரிசோதனை முடிந்த நிலையில் உடல் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்வதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சென்னை பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி கை, கால்கள், வெட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் உடல்  போலீசாரால் கண்டு எடுக்கப்பட்டது. அது எந்த பெண்ணுடையது என்பது குறித்து போலீசார் 15 நாட்களாக அடையாளம் காண முயன்ற நிலையில் அது நாகர்கோவில் சந்தியாவின் உடல் என தெரியவந்தது. இந்த கொலை தொர்பாக ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த சினிமா இயக்குனர் பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக சந்தியாவை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து கூவம் ஆற்றில் வீசியதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.

இதனையடுத்து சென்னை ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் பாலம் அருகில் உள்ள கூவம் ஆற்றில் சந்தியாவின் கை, கால்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் உள்ள உடல் பாகங்களை கணவர் பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின்படி அதே பகுதியில் இடுப்புக்கு கீழ் பகுதி உடல் பாகத்தை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சந்தியாவை தான் கொலை செய்யவில்லை என்று பாலகிருஷ்ணன் மறுத்தது சர்ச்சையைக் கிளப்பியது. போலீசார் ஜாபர்கான் பேட்டையில் உள்ள பாலகிருஷ்ணன் வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் பாலகிருஷ்ணன் கொலை செய்தது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து கூவம் ஆற்றில் பறிமுதல் செய்யப்பட்ட உடல் பாகங்கள் அனைத்தும் சந்தியாவின் உடல்தானா என்பதை உறுதிப்படுத்துவற்கான மருத்துவப்பரிசோதனை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையில் நடைபெற்று வந்தது. தடய அறிவியல் நிபுணர்கள் அது குறித்த தீவிர விசாரணையில் இறங்கினர். ஆனால் இந்த வழக்கில் தற்போது வரை இடுப்புக்கு மேல் பகுதி மற்றும் தலை உள்ளிட்ட இரண்டு உடல் பாகங்களை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது தொடர்பாக தனிப்படைகள் அமைத்தும் அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் மருத்துவப்

பரிசோதனை முடிக்கப்பட்ட சந்தியாவின் உடல்பாகங்களை பள்ளிக்கரனை போலீசார் அவர்களின் உறவினர்களிடம் நேற்று ஒப்படைத்தனர். உடல் அடக்கம் செய்வதற்காக நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுவதாக உறவினர்கள் தெரிவித்தனர்.