சாப்பாட்டுக்கு வழியின்றி சென்னையில் தவித்த சூடான் மாணவருக்கு போலீஸ் செய்த உபகாரம்

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2019 11:31

சென்னை, ஏப்.6–       

கையில் பணமின்றி, சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சென்னையில் சுற்றித்திரிந்த சூடான் நாட்டு மாணவரை மீட்டு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த மெரீனா போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

சூடான் நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது முஸ்தபா (வயது 22). சூடானில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் ‘டிப்ளமோ இன் பார்மஸிஸ்ட்’ படிப்பிற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு   சென்னைக்கு வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மெரீனா பீச்சுக்கு வந்த அவர் அங்கு திடீரென ஏற்பட்ட அடிதடியில் மெரீனா போலீசாரால்  கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சில மாதங்கள் சிறையில் கழித்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்தார்.  நாகப்பட்டினம் சென்று படிப்பதற்கும் வழி இல்லை. அவரது விசாவும் கடந்த 2016ம் ஆண்டே காலாவதியாகி விட்டது. இதனால் அவர் அபராதத் தொகை செலுத்த முடியாமல் சாப்பாட்டுக்கு வழியின்றி மெரீனா பிளாட்பார்மில் படுத்து துாங்கி பொழுதைக் கழித்தார். மேலும் அவர் இஸ்லாமிய மதத்தைச்சேர்ந்தவர் என்பதால் சென்னையில் உள்ள சில மசூதிகளில் தங்கி சின்ன சின்ன வேலைகளை செய்து சாப்பாட்டுக்கு மட்டும் சம்பாதித்து வந்தார். அடிக்கடி மெரீனாவில் பீச்சில் படுத்து துாங்கிய முஸ்தபாவை மெரீனா ரோந்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மெரீனா போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர் என தெரியவந்தது. அது குறித்து மெரீனா போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு சூடான் மாணவர் பற்றிய தகவல் கிடைத்தது. அந்த மாணவருக்கு வேண்டிய உதவிகளை செய்து அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும்படி கமிஷனர் விஸ்வநாதன் மெரீனா போலீசுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மெரீனா இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், எஸ்ஐ தினேஷ் ஆகியார் சூடான் மாணவர் முஸ்தபாவை அணுகி அவருக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டனர். அப்போது அவர் எனது விசா காலாவதியாகி விட்டதால் நான் இந்திய அரசாங்கத்துக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் விமான டிக்கெட்டுக்கு ரூ. 40 ஆயிரம் வேண்டும். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறேன். என் பெற்றோர் சூடானில் ஏழ்மையான சூழலில் உள்ளனர். அதனால் நான் எனது ஊருக்கு செல்ல முடியவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மாணவர் முஸ்தபா செலுத்த வேண்டிய தொகை மற்றும் விமான டிக்கெட்டுக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் சென்னை விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகளிடம் மாணவரின் நிலைமையை எடுத்துச் சொல்லி அவரை எந்த பிரச்சினையும் இன்றி சூடானுக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இதனையடுத்து முஹம்மது முஸ்தபா நாளை மதியம் 12.30 மணி விமானத்தில் ‘சவுதி அரேபியன்’ ஏர்லைன்ஸ் விமானத்தில் சூடான் நாட்டுக்கு பயணமாகிறார். தனக்கு சென்னை போலீசார் செய்த உதவியை எப்போதும் மறக்கமாட்டேன் என்று முஸ்தபா மெரீனா போலீசாரை கைகூப்பி கண்ணீருடன் விடைபெற்றார். இது குறித்து மெரீனா இன்ஸ்பெக்டர் ஜெயராஜிடம் பேசிய போது, ‘‘எல்லா பெருமையும் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனையே சேரும். மாணவருக்கு உதவும்படி கமிஷனர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எங்களது தீவிர முயற்சியில் சூடான் மாணவரை மீட்டு அவரது சொந்த ஊருக்கு செல்ல முயற்சி செய்தோம். அது நல்லபடியாகவே முடிந்தது’’ என தெரிவித்தார்.

சென்னையில் திக்குத் தெரியாமல் சுற்றித்திரிந்த சூடான் நாட்டு மாணவனை காப்பாற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உதவிய கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் மெரீனா போலீசாரின் இந்த சிறந்த மனிதநேயத்தை சமூக ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.