படித்தவன், படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை: சீமான் பேச்சு

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2019 03:52


திருநெல்வேலி:

படித்தவன், படிக்காதவன் என அனைவருக்கும் அரசு வேலை கொடுக்கப்படும் என நெல்லையில் நடந்த நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

நெல்லை பார்லி.,தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் சத்யா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு, நெல்லை டவுனில்  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: இந்த கட்சியை நாங்கள் உருவாக்கவில்லை. காலம் தான் உருவாக்கியது. நம் மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் எல்லைதாண்டி வந்து சுடுகிறார்கள். அவர்களை எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் என இந்திய அரசு அறிவிக்கவில்லை. மாறாக இந்திய கடற்படை வேடிக்கை பார்க்கிறது. இப்போது கொலை, கற்பழிப்பு சமூக குற்றங்களாக மாறிவிட்டது. இதற்கு காரணம் என்ன? நமது கல்வியில் பிழை உள்ளது. ஒருவனது கல்வி அவனுக்கு வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும். இப்போதுள்ள கல்வி அப்படியில்லை. எனவே தான் நாங்கள் புதிய கல்விக்கொள்கை கொண்டு வருவோம் என்கிறோம். நாட்டிலேயே நீருக்கும், சோறுக்கும் திட்டம் வைத்துள்ள கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். தரமான இலவச கல்வி, ஏழை, பணக்காரன் என்ற வித்யாசம் இல்லாத வகையில் உலகத்தரம் வாய்ந்த இலவச மருத்துவம் கொடுப்போம். தண்ணீரை யாருக்கும் விற்கமாட்டோம். படித்தவன், படிக்காதவன் என அனைவருக்கும் அரசு வேலை கொடுக்க தனியாக திட்டம் எங்களிடம் உள்ளது. எனவே இந்த தேர்தலை ஒரு மாறுதலாக மக்கள் பார்க்க வேண்டும். புதிய அரசியல், புதிய மாறுதலுக்காக விவசாயி சின்னத்திற்கு ஓட்டளித்து வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

 கூட்டத்தில் வேட்பாளர் சத்யா, கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்