திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா கோலாகல துவக்கம்

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 06:16


திருச்செந்துார்,:

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசிப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும்ற 19ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

 தமிழ்கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடும், சிறந்த குரு பரிகார ஸ்தலமுமான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதில் மாசிப்பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டுக்கான மாசிப் பெருந்திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழா தொடர்ந்து வருகிற மார்ச் 21ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

கொடியேற்றம்:

மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளி பல்லக்கில் கொடிப்பட்டம் ஊர்வலமாக ஒன்பது சந்திகளிலும் வலம் வந்து கோயிலை சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் அதிகாலை 5.20 மணிக்கு மகர லக்கணத்தில் கோயில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் திருவிழாவிற்காக காப்புகட்டிய சண்முகம் பட்டர் கொடியேற்றினார்.

புனிதநீர் அபிஷேகம்

 தொடர்ந்து கொடிமரம் தர்ப்பை புல்லால் அலங்கரிக்கப்பட்டது. கொடி மர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட் 16 வகையான திரவியங்களால் சோடஷ அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து பூஜையில் கும்பங்களில் வைக்கப்பட்டு இருந்த புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பட்டு ஆடைகளாலும், வண்ண மலர்களாலும் கொடிமர பீடம் அலங்கரிக்கப்பட்டது.

  வேத மந்திரங்கள் முழங்க, அரோகரா கோஷத்துடன் காலை 6.30 மணிக்கு கொடிமரத்திற்கு சோடஷ தீபாராதனை நடந்தது. அதனைத்தொடர்ந்து் கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நான்கு வகை வேதங்கள் பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை 4.30 மணிக்கு அப்பர் சுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோயிலை சேர்ந்தார். இரவு 7 மணிக்கு ஸ்ரீபெலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்த பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டு ஒன்பது சந்திகளில் உலா வந்து கோயிலை சேர்ந்தார்.

இன்று வீதி உலா

 மாசித் திருவிழாவின் 2ம் நாளான இன்று காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும், இரவில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு வீதிகளிலும் உலா வருகிறார்கள்.

 நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் காஞ்சிபுரம் தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், திருக்கோயில் இணை ஆணையர் பாரதி, டிஎஸ்பி (பொ) செந்தில்குமார், உள்துறை கண்காணிபபாளர்கள் கார்த்திகேயன்,

வெள்ளைச்சாமி, உள்துறை மேலாளர் விஜயன், பிஆர்ஓ., மாரிமுத்து, ஏரல் சோ்மன் கோயில் பரம்பரை அக்தர் கருத்தப்பாண்டியன், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், தேவார சபையினர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிகப்பு சாத்தி வீதிஉலா:

 திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப் 14-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோயிலில் (சிவன் கோயிலில்) இரவு 7.30 மணிக்கு குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது. பிப் 16-ம் தேதி அன்று ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் மகர லக்கனத்தில் சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.

 அதனைத் தொடர்ந்து 8.45 மணிக்குள் மேல் ஆறுமுகப்பெருமான் வெற்றி வோ் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சோ்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சிவன் அம்சத்தில் தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  

பச்சை சாத்தி வீதிஉலா:

பிப் 17ம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வௌ்ளிச்சப்பரத்தில் வௌ்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோவில் வந்து அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

 தொடர்ந்து நண்பகல் 11.30 மணிக்குள் சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயில் சோ்கிறார்.

பிப் 18-ம் தேதியன்று ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி் தங்க கையிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வௌ்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

 தேரோட்டம், தெப்ப உற்சவம்:

 பிப்., 19-ம் தேதி பத்தாம் திருவிழா அன்று திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கும்ப லக்கனத்தில் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் ரதவீதியில் வலம் வந்து அருள் பாலிக்கும் தேரோட்டம் நடக்கிறது. பிப்., 20-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.

 விழா நாட்களில் தினசரி கலையரங்கில் பக்தி சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.