திருச்செந்துாருக்கு பறக்கும் காவடி : மணவாளக்குறிச்சியிலிருந்து புறப்பட்டு சென்றது

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2019 06:05


மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி பவனியாக புறப்பட்டு சென்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோயிலில் இருந்து செந்தில் ஆண்டவர் திருப்பணி பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் 30வது வருட காவடி பவனி, சேரமங்கலம் தென்திருவரங்கத்து ஆழ்வார்சுவாமி திருக்கோயில் மற்றும் வடக்கன்பாகம் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயில் ஆகிய இடங்களில் இருந்து பறக்கும் காவடி, வேல்காவடி மற்றும் புஷ்பகாவடிகள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பவனியாக புறப்பட்டு சென்றது. அனைத்து இடங்களிலும் கடந்த 3ம் தேதி மாலை காவடி இருப்பு இருத்தி பூஜை, காவடி பூஜை நடந்தது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. முதல் நாள் கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வேல்தரித்தல், காவடி பெரும் பூஜை, காவடி அலங்காரம், காவடி கோயிலில் இருந்து பவனியாக புறப்பட்டு பம்மத்துமூலை, ஆற்றின்கரை, அடம்புவிளை, பேச்சிவிளாகம், பிள்ளையார் கோவில், தருவை, புதுக்கடைதெரு, ஆசாரிமார்தெரு, வடக்கன்பாகம், ஆண்டார்விளை, தட்டான்விளை, பாபுஜிதெரு வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. அன்னதானம், மாலை 5 மணிக்கு வேல்காவடி, புஷ்பகாவடி மற்றும் பறக்கும் காவடிகள் கோயிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி ஜங்சன், ஆற்றின்கரை, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, இராஜாக்கமங்கலம், நாகர்கோவில் வழியாக திருச்செந்தூர் புறப்பட்டு சென்றது.