90 பவுனை மீட்ட தனிப்படைக்கு கமிஷனர் பாராட்டு

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019 13:39


சென்னை:

போலீஸ் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து தப்பிக்க முயன்ற பலே திருடனை கைது செய்து 90 பவுன் நகைகளை மீட்ட சென்னை மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் உள்ளிட்ட தனிப்படை போலீசாரை கமிஷனர் விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதிகள் வழங்கினார்.

சென்னை, மடிப்பாக்கம் தலைமைக் காவலர் விஜயகாந்த் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி காலையில் வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர் மெயின்ரோடு அருகில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் இருந்தார். அப்போது மடிப்பாக்கம் சரகத்தில் நடந்த குற்றச் சம்பவங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளியின் உருவத்தை போன்ற நபர் ஒருவர் அவ்வழியே செல்வதை கண்டு உஷாரானார்.  உடனே, அந்த நபரை பின் தொடர்ந்து  சென்றார். அந்த ஆசாமி சிறிது துாரம் சென்ற பின்னர் அங்கு நின்றிருந்த சான்ட்ரோ காரை திறந்து ஏற முயன்றார். அப்போது அவரை தலைமைக்காலவர் விஜயகாந்த் பிடித்து விசாரணை நடத்தினார். பின்னர் அந்த நபர் காரிலிருந்த செல்போனை எடுப்பதாக கூறி காரிலிருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து விஜயகாந்தின் முகத்தில் அடித்து தப்பி ஓட முயன்றார். பெப்பர் ஸ்பிரே முகத்தில் பட்டதால் கண் எரிச்சல் ஏற்பட்ட போதும், அதை பொருட்படுத்தாமல் குற்றவாளியை பிடிக்க உதவி செய்யுங்கள் என தலைமைக்காவலர் விஜயகாந்த கூக்குரல் இட்டார். அப்போது அங்கு  வந்த ஆட்டோ  டிரைவர் மோகனசுந்தரம் என்பவரின் உதவியுடன் துணிச்சலுடன் அந்த ஆசாமியை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

விசாரணையில் பிடிபட்ட நபர் திருப்பூரைச் சேர்ந்த சுந்தர் (எ) சுந்தராஜ் (எ) புறா ராஜ் (35) என தெரியவந்தது. அவர் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தங்கியிருந்து, மடிப்பாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிகளில் 17 வீடுகளின் பூட்டை உடைத்து திருடியுள்ளதும், இவர் மீது கோயம்புத்தூரில் ஒரு கொலை வழக்கு உள்ளதும் தெரியவந்தது. திருடிய தங்க நகைகளை கோயம்புத்தூரில் உள்ள தனது 2வது மனைவியிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும், அடகு கடைகளில் அவற்றை அடமானம் வைத்திருப்பதாகவும் சுந்தர் தெரிவித்தார். இதனையடுத்து மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் கங்கைராஜ் தலைமையில் ஆதம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முரளி, மடிப்பாக்கம் எஸ்ஐ பாண்டிதுரை, பள்ளிக்கரணை எஸ்ஐ முத்துசாமி, மடிப்பாக்கம் சிறப்பு எஸ்ஐ சாந்தகுமார், ஆதம்பாக்கம் தலைமைக்காவலர் பாலகிருஷ்ணன், மடிப்பாக்கம் தலைமைக்காவலர் விஜயகாந்த் மற்றும் ஆதம்பாக்கம் தலைமைக்காவலர் அந்தோணிராஜ், மடிப்பாக்கம் முதல் நிலை காவலர் ரகு, ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு காவலர் அல்பர்கான் ஆகியோர்  அடங்கிய  தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கோயம்புத்தூர் சென்று தீவிர விசாரணை செய்து சுந்தர் (எ) சுந்தராஜின் இரண்டாவது மனைவி கீதாவிடமும் மற்றும் அடகு கடைகளில் அடகு வைத்திருந்த சுமார் 90 சவரன் தங்க நகைகள், 3 லேப்டாப், 1 செல்போன், 2 டேப்லெட், ரொக்கம்  ரூ.3 லட்சம், குற்ற சம்பவங்களுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 3 கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும் சுந்தர் (எ) சுந்தராஜ் அடகு வைத்துள்ள 40 பவுனை மீட்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருட்டு ஆசாமியை கையும் களவுமாக பிடித்த தலைமைக்காவலர் விஜயகாந்த் மற்றும் 90 பவுன் நகைகளை மீட்ட மடிப்பாக்கம் உதவிக்கமிஷனர் கங்கைராஜ் தலைமையிலான தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் அழைத்து வெகுமதிகள் வழங்கி பாராட்டினார்.