முதியோர், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டு ஏறி வரவேண்டாம், நானே இறங்கி வருகிறேன்

பதிவு செய்த நாள் : 10 பிப்ரவரி 2019 13:36


சென்னை:

சென்னை நகர காவல்துறையில் பெண்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விஷயத்தில் தனது கருணை பார்வையை வீசி அவர்களது மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் சென்னை நகர கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன்.

‘‘வயது முதிர்ந்தவர்கள், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டு ஏறி மேல வரவேண்டாம். இணைக்கமிஷனர் கீழே இறங்கி வந்து உங்களை சந்தித்து குறை  கேட்பார்’’ இந்த வாசகங்கள் வேறு எங்கும் இல்லை. சென்னை எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல போலீஸ் இணைக்கமிஷனர் அலுவலக வரவேற்பறையில்தான் வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து புகார் அளிப்பதற்காக பலதரப்பட்ட மக்கள் வருகின்றனர். இவர்களில் பெரியவர்கள், மூதாட்டிகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் போது அவர்கள் வெகுநேரம் காத்திருப்பது, அதிகாரியின் அலுவலகம் மேல் மாடியில் இருந்தால் அதுவரை ஏறி செல்வது என்பது சவாலான விஷயமாகி விடுகிறது.

தற்போது சென்னை எழும்பூர் பழைய கமிஷனர் அலுவலகத்தில் புதிய கட்டடத்தில் இயங்கி வரும் கிழக்கு மண்டல போலீஸ் இணைக்கமிஷனர் அலுவலகம் அங்குள்ள இரண்டாவது மாடியில் உள்ளது. 2வது மாடிக்கு செல்ல லிப்ட் வசதியும் இல்லை.  கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் இரண்டு மாடி ஏறி மேலே வருவது கடினமான விஷயமாகும். இதனால் கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் அவர்களை மேலே ஏறி வரவேண்டாம் என்றும், தானே இறங்கி வந்து குறைகளை கேட்பதாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனை புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ‘‘வயது முதிர்ந்தவர்கள், கைக்குழந்தை வைத்திருப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டு ஏறி மேல வரவேண்டாம். இணைக்கமிஷனர் கீழே இறங்கி வந்து உங்களை சந்தித்து குறை  கேட்பார்’’ என்ற வாசகங்களை அலுவலகத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வரவேற்பறையில் வைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்த வாசகங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

அங்கு மட்டுமின்றி தனது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் ஆகிய காவல்மாவட்டங்களிலும் துணைக்கமிஷனர் அலுவலகம் மேல் மாடியில் இருக்கக்கூடிய இடங்களில் வயது முதிர்ந்தவர்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளை உயர் அதிகாரிகள் கீழே இறங்கி வந்து நேரில் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ‘‘இதற்கு முன்பு நான் மயிலாப்பூர் துணைக்கமிஷனராக இருந்த போது எனது அலுவலகம் தரைத்தளத்தில்தான் இருந்தது. அதனால் பொதுமக்கள் என்னை வந்து சந்திப்பதில் சிரமம் இல்லை. தற்போது உள்ள இணைக்கமிஷனர் அலுவலகம் இரண்டாவது மாடியில் உள்ளதால் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் என்னை வந்து சந்திப்பது கடினமான விஷயமாக அமைந்து விட்டது. அவர்களது சிரமத்தை குறைப்பதற்காகவே இது போன்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணனின் இந்த மனிதநேயம் மிக்க செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.