நிலக்கரி இறங்குதளம் - பாலம் அமைக்க எதிர்ப்பு: கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள் : 07 பிப்ரவரி 2019 17:50

திருச்செந்தூர்,

திருச்செந்துர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே அனல்மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை கடல் வழியாக கப்பலில் கொண்டு வந்து இறக்க வசதியாக திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைப்பதால் ஆலந்தலை பகுதிக்குள் கடல்நீர் புகுந்து விடும் என்பதால் அந்த திட்டத்தை கைவிடவேண்டும் என வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

கல்லா மொழி கடற்கரையில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைக்ககூடாது என்றும், ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆலந்தலை பகுதி மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் அனைவரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை கடற்கரையில் நிறுத்தியிருந்தனர். அனைத்து படகுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது. மீனவர்களின் பேராட்டத்திற்கு ஆதரவாக ஆலந்தலை பகுதி பொதுமக்களும் கடற்கரையில் திரண்டனர். 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் கடற்கரையில் மனிதசங்கிலி போன்று வரிசையாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லாமொழியில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் பாலம் அமைக்ககூடாது, ஆலந்தலை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

 மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலுக்குள் இறங்கி நின்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

இந்த போராட்டத்தால் ஆலந்தலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.