மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸால் பரபரப்பு

பதிவு செய்த நாள்

13
பிப்ரவரி 2016
22:46

மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.

இன்று காலை பெரியார் பஸ் நிலையத்தில் உள்ள முதல் பிளாட்பாரத்தில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று நீண்ட நேரமாக கிடந்தது. இதனை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதனால் சூட்கேசில் மர்ம பொருட்கள் இருக்கும் என பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து திடீர்நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்து சூட்கேசை சோதனையிட்டனர். தொடர்ந்து அதனை திறந்து பார்த்த போது அதில், பழைய பேப்பர்களும், சில துணி மணிகளும் இருந்தது.

வெளியூர் செல்லும் பயணிகளில் யாரோ ஒருவர் சூட்கேசை மறந்து விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது. இந்த சூட்கேசால் பெரியார் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது